தொலைபேசியை பறித்த அதிபரால் நஞ்சருந்திய மாணவன்
பாடசாலை அதிபர் மாணவன் ஒருவரின் தொலைபேசியை பறித்தமையினால் குறித்த மாணவன் நஞ்சருந்தி தற்கொலை செய்ய முயன்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் வவுனியா பூவரசங்குள பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, வவுனியா பூவரசங்குளம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இல்ல விளையாட்டு போட்டிக்கான இல்ல அலங்கார செயற்பாட்டினை குறித்த மாணவன் சக மாணவர்களுடன் இணைந்து மேற்கொண்டதாகவும், அதற்கான ஒவியம் வரைவதற்காக அன்றையதினம் இரவு பாடசாலைக்கு தொலைபேசியினை கொண்டு சென்றதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
காவல்துறையிடம் முறைப்பாடு
இவ்வாறு தொலைபேசியினை பாடசாலையினுள் குறித்த மாணவன் பாவிப்பதை கண்ட அதிபர் தொலைபேசியினை பறித்ததுடன் மாணவனின் தந்தையை தன்னை வந்து சந்திக்க வேண்டும் என கூறியதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
அதன் பின்னர் மாணவனின் தாய் அதிபரிடம் தொலைபேசியில் விடயத்தை கேட்டதுடன் தொலைபேசியை வழங்குமாறும் கோரியுள்ளார்.
எனினும் அதிபர் தொலைபேசியினை வழங்காததுடன், தந்தையை கட்டாயம் தன்னை சந்திக்க வேண்டும் எனவும் தெரிவித்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
இதனை அடுத்து தொலைபேசியின் ஊடாக மாணவனின் தந்தை அதிபரை தொடர்பு கொண்டு கதைத்துள்ளார். இதன்பின்னர், மாணவனின் தந்தை தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக பூவரசங்குளம் காவல்துறையிடம் அதிபர் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணை
இவ் முறைப்பாட்டினை அடுத்து இரு தரப்பினரையும் காவல்துறையினர் அழைத்து விசாரணை நடத்தியதாக மாணவனின் உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையிலேயே அவமானத்தை தாங்க முடியாமல் குறித்த மாணவன் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயன்றதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த மாணவனின் சக வகுப்பு மாணவ, மாணவிகள் வகுப்பறைக்கு செல்லாமல் பாடசாலைக்கு முன்பாக கூடியிருந்தனர்.
இதனை அடுத்து வலய கல்வி பணிமனை அதிகாரிகள் பாடசாலையில் மாணவனின் உறவினர்களுடன் கலந்துரையாடியதுடன் மாணவர்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக மாணவனின் பெற்றோரால் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் வவுனியா தெற்கு வலய கல்வி பணிமனையில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், எதிர்வரும் 12 ஆம் திகதி குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைக்காக அதிபர் மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர் ஆகியேர் மனித உரிமை ஆணைக்குழுவினால் அழைக்கப்படவுள்ளனர்.
அத்துடன் இச்சம்பவம் தொடர்பான வலயக் கல்விப் பணிப்பாளரும் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 5 நாட்கள் முன்
