யாழில் மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரை விற்பனை: பலர் கைது
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை தரும் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஜெகத் நிஷாந்த தலைமையிலான யாழ் மாவட்ட காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் இணைந்து நடத்திய சுற்றி வளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குருநகரை சேர்ந்த ஐவரும் யாழ்ப்பாணம் நாவாந்துறையை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாடசாலை மாணவர்களை இலக்கு
18,19,20,21, வயதுடைய குறித்த நபர்கள் நீண்ட நாட்களாக வலையமைப்புக்குள் இருந்து பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை தரும் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இவர்கள் இன்று புனித பத்திரிசியார் பாடசாலைக்கு அருகில் வியாபாரத்தில் ஈடுபட்ட நிலையில் யாழ் மாவட்ட காவல்துறை புலனாய்வு பிரிவினர் இருவரை கைது செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணைகளின் போது ஏனையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்திரைகளுடன் கைது
இவர்களில் ஒருவர் முச்சக்கரவண்டியில் வியாபாரம் செய்யும் போது மாவட்ட காவல்துறை புலனாய்வு பிரிவினரும் குற்றதடுப்பு பிரிவினரும் இணைந்து கைது செய்ய முயற்சித்த போது நாவாந்துறை சந்தியில் முச்சக்கரவண்டியை விட்டு விட்டு ஓடும் போது 300 மாத்திரகைளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |