தரமற்ற நிலக்கரி சர்ச்சை : ஆறு கப்பல்களுக்கு விதிக்கப்பட்டது அபராதம்
10 நிலக்கரி கப்பல்களில் 8 கப்பல்களில் இருந்து நிலக்கரி இருப்புக்கள் தற்போது இறக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.
இன்று (24) பிற்பகல் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இறக்கப்பட்ட 8 நிலக்கரி கப்பல்களில் 6 கப்பல்களின் அறிக்கைகள் கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
ஆறு கப்பல்களில் உள்ள நிலக்கரி
கேள்விக்குரிய ஆறு கப்பல்களில் உள்ள நிலக்கரி நிர்ணயிக்கப்பட்ட தரங்களை பூர்த்தி செய்யாததால் அபராதம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, முதல் கப்பலில் இருந்து $2.07 மில்லியன் அபராதமும், இரண்டாவது கப்பலில் இருந்து $403,601 டொலர்களும், மூன்றாவது கப்பலில் இருந்து $484,929 டொலர்களும், நான்காவது கப்பலில் இருந்து $345,652 டொலர்களும், ஐந்தாவது கப்பலில் இருந்து $500,192 டொலர்களும், ஆறாவது கப்பலில் இருந்து $510,677 டொலர்களும் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இதற்கிடையில், தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் ஏற்பட்டதாகக் கூறப்படும் இழப்புகளைக் கணக்கிட்டு அறிக்கை வெளியிட மொரட்டுவ மற்றும் ஜெயவர்தனபுர பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்கள் மற்றும் அமைச்சக அதிகாரிகள் அடங்கிய குழு நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |