ஒரு காலத்தில் சுமந்திரனை இலக்கு வைத்திருந்த கணேமுல்ல சஞ்சீவ..!
எம்.ஏ.சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது, அவரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியவர்களில், இன்று கொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டிருந்தார்.
இது குறித்த வழங்கானாது, கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஶ்ரீராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதிமன்ற உத்தரவு
அதன்போது, எம்.ஏ. சுமந்திரனை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியமை, ஆயுத வர்த்தகம் செய்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்ட பாதாள உலகக்குழு உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ உள்ளிட்ட 11 சந்தேகநபர்கள் நீதிமன்றில் முற்படுத்தபட்டனர்.
எனினும், முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, குறித்த 11 பேருக்கும் எதிராக வழக்கு தொடர்வதற்கு போதுமான சாட்சிகள் இல்லையென சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கிய நிலையில், சந்தேகநபர்களை விடுவித்து நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
எவ்வாறாயினும், சுமந்திரனை கொலைச் செய்ய சதித் திட்டம் தீட்டிய சந்தேகத்திலும் ஆயுத கடத்தல் தொடர்பிலும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் கணேமுல்ல விளக்கமறியலில் இருந்து தமது பொறுப்பில் எடுத்து, வெள்ளவத்தை காவல் நிலைய சிறைக் கூண்டில் தடுத்து வைத்து 2019 ஆம் ஆண்டு முதல் விசாரித்திருந்தனர்.
தீவிர விசாரணை
இவ்வாறானதொரு பின்னணியில், இன்று காலை புதுக்கடை நீதிமன்றினுள் நடந்த துப்பாக்கி சூட்டில் கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பில், காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதோடு, கொலை தொடர்பான சந்தேகநபரின் சிசிரிவி காட்சிகளும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்