பிரதமர் ஹரிணிக்கு எதிராக சுமந்திரன் முறைப்பாடு
சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒரு கோயில் வளாகத்தைப் பயன்படுத்தியது குறித்து விசாரணை நடத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக தமிழரசுக் கட்சி பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், முறைப்பாடு அளித்திருந்தாலும் தேர்தல் ஆணைக்குழு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆணைக்குழுவின் அதிகாரம்
அதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு கோயில் வளாகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தேர்தல் பிரச்சாரம் நடத்துவது தொடர்பில் முறைப்பாடு அளிக்கப்பட்ட போது, தேர்தல் ஆணைய அதிகாரிகள் அந்த இடத்திற்குச் சென்றனர்.
ஆனால் பிரதமரின் பாதுகாப்புப் பணியாளர்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகளை உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை, அவர்கள் திரும்பிச் சென்றனர்.
நாட்டில் தேர்தல் நடவடிக்கைகளை நிர்வகிக்கவும் மேற்பார்வையிடவும் தேசிய தேர்தல் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.” என்றார்.
சட்டவிரோத நடவடிக்கை
இந்த நிலையில், சட்டங்களின்படி, தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காவல் துறை தேர்தல் ஆணையத்தின் கீழ் வருவதாகவும் சட்டமும் அரசியலமைப்பும் இதைக் கூறவதாக சுட்டிக்காட்டிய சுமந்திரன், தேர்தல் ஆணைக்குழு ஒரு சுயாதீன ஆணைக்குழுவாக இருந்தாலும், இந்த அதிகாரங்களில் எதையும் பயன்படுத்தாததால் சட்டவிரோத நடவடிக்கைகள் அனைத்தும் நடைபெறுவதாக கூறியுள்ளார்.
இதேவேளை, தேர்தல் ஆணைக்குழுவிற்கு குறித்த பிரச்சினைகளை விசாரிக்கவோ அல்லது தீர்க்கவோ முதுகெலும்பு இல்லை என்று கூறிய சுமந்திரன், நல்லாட்சி மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதாகக் கூறும் அரசாங்கம், ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களுக்குள் இவற்றை வெளிப்படையாக மீறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன்படி, அதிகாரங்களை கொண்டிருக்கும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு முதுகெலும்பு இருந்தால் உடனடியாக இந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
