கொழும்பிலிருந்து துரத்தப்பட்ட மகிந்த - பின்னணியில் அரங்கேறும் நாடகங்கள்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு பொதுமக்களின் அனுதாபத்தை பெறுவதற்காக நாடகங்கள் நடத்தப்படுகின்றன என்று தொழில்துறை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே தொழில்துறை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி (Sunil Handunneththi) இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் உரையாற்றுகையில் பொதுஜன பெரமுன மற்றும் ராஜபக்சக்கள் தங்கள் அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்ய வேண்டிய நிலையில் அவர்கள் எங்கும் செல்ல முடியாது என்று கூறி அனுதாபத்தைப் பெற முயற்சிக்கிறார்கள் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு சரியான பாதையில்
ஜனாதிபதியின் உரிமை இரத்து யோசனையை நிறைவேற்றிய பிறகு நாடு சரியான பாதையில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தை அங்கீகரிப்பதன் மூலம் அரசாங்கம் அதன் வாக்குறுதியைக் காப்பாற்றியுள்ளது என்று அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று விஜேராமாவின் இல்லத்திலிருந்து தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு புறப்படும்போது அவரது ஆதரவாளர்கள் மற்றும் மொட்டு அரசியல்வாதிகள் கூடி வழியனுப்பி இருந்தனர்.
தொடங்கிய இடத்திற்குத் திரும்பி
இவ்வாறான பின்னணியில் தான் அரசியலை விட்டு ஒருபோதும் செல்லப் போவதில்லை என்றும் தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவேன் என்றும் விஜேராம இல்லத்தை விட்டு வெளியேறும் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மகிந்த தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு விடைபெறுவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, 'X' கணக்கில் தனது தந்தை எல்லாம் தொடங்கிய இடத்திற்குத் திரும்பிவிட்டதாகவும் உண்மையான பலம் பதவிகள் அல்லது சலுகைகளிலிருந்து அல்ல, மக்களின் அன்பிலிருந்து வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மகிந்தவிற்கு கொழும்பில் வீடுகளை வழங்க தமிழர் ஒருவர் உட்பட நால்வர் முன்வந்துள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ் டயஸ்போராவை திருப்திப்படுத்தவே அநுர அரசு இவ்வாறு நடந்து கொள்வதாக விஜேராமா இல்லத்தின் முன்னால் கூடியிருந்த மகிந்த ஆதரவாளர்கள் கூச்சலிட்டதாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
