தமிழரசுக் கட்சிக்காக களமிறங்கப்போகும் சுமந்திரன்
இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளுக்கு எதிராக நீதிமன்றங்களில் முன்னிலையாகி வாதாடப்போவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அதிபர் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கூறியதாவது, “இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராகவும், கட்சியின் பொதுக் குழுக் கூட்டங்களின் முடிவுகளுக்கு எதிராகவும், யாழ்ப்பாணம், திருகோணமலை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு, இடைக்காலக் கட்டாணைகள் வழங்கப்பட்டுள்ள வழக்குகள் சம்பந்தப்பட்ட விடயத்தில் கட்சியின் தலைவர்கள் கேட்டுக் கொண்டால் அவர்களுக்காக நீதிமன்றங்களில் முன்னிலையாகி அந்த வழக்குகளுக்கு எதிராக வாதாடுவேன்.
எதிராளி
இந்த வழக்குகள், கட்டாணைகள் குறித்து இன்று காலையிலேயே கொழும்பில் கேள்விப்பட்டேன்.
திருகோணமலை வழக்கில் என் பெயரும் எதிராளியாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக இப்போது அறிந்துள்ளேன்.
ஏனைய எதிராளிகளான எமது கட்சியின் சகாக்கள் கேட்டுக்கொண்டால் அவர்களுக்காகவும் இந்த வழக்கில் முன்னிலையாகி கட்சிக்காக வாதாடுவேன்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |