கறுப்பு யூலை படுகொலைக்கு நீதிகோரி பிரித்தானியாவில் திரண்ட தமிழர்கள் (படங்கள்)
கறுப்பு யூலை படுகொலை இடம்பெற்று 40 ஆண்டுகால நினைவு நாளினை முன்னிட்டு பிரித்தானியாவின் பெருநகர மத்தியில் இன்று திரண்ட புலம்பெயர் தமிழர்கள் நீதி கோரி எழுச்சி பேரணி ஒன்றை நடத்தினர்.
ஈழம் அமைதலே தமிழ் மக்களின் நிரந்தர பாதுகாப்பிற்கான ஒரே தீர்வு அத்துடன் இலங்கையில் சுபீட்சத்திற்கும் ஸ்திரத்தன்மைக்குமான பாதையும் இதுவேதான் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு ஒன்று திரண்ட புலம்பெயர் தமிழர்கள் பிரித்தானிய அரசிற்கும் சர்வதேசத்திற்கும் தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.
40 ஆண்டுகள் கடந்த நிலையிலும்
இனப்படுகொலை நடைபெற்று 40 ஆண்டுகள் ஆன நிலையில் இதுவரையில் எந்தவித நீதியும் கிடைக்காத நிலையில் சர்வதேசத்திடம் நீதி கோரி பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் இன்று மாலை Trafalgar சதுக்கத்தில் எழுச்சி பேரணியில் ஈடுபட்டனர்.
மாலை 5 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
படுகொலைகளை மாணவர்கள் கலை வடிவில்
பிரித்தானியாவில் உள்ள பல தமிழ் அமைப்புக்கள் மற்றும் தமிழ் பாடசாலைகள், சங்கங்கள் போன்ற அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து நடத்திய இந்நிகழ்வில் இனப்படுகொலைக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் உரைகள் இடம்பெற்றதுடன் தமிழர் மீதான படுகொலைகளை மாணவர்கள் கலை வடிவில் வெளிப்படுத்தினர்.
விளக்க புகைப்பட கண்காட்சி
அதேவேளை 1983 இனப்படுகொலையின் பதிவுகளை சுமந்த விளக்க புகைப்பட கண்காட்சியும் அங்கு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
கறுப்பு யூலையின் முக்கியத்துவம்
மேலும் இலங்கை வரலாற்றில் கறுப்பு யூலையின் முக்கியத்துவம் பல தசாப்த கால யுத்தத்தில் கறுப்பு யூலையின் தாக்கம் தமிழர்கள் நீதி மற்றும் உரிமைகளை தேடிக்கொண்டிருக்கும் இடம் எப்படி நமது இலக்குகளை அடைவோம் ஆகிய கருப்பொருட்களை உள்ளடக்கி Dr மதுரா இராசரத்தினமும் 1983 இனக்கலவரத்தின் போது தனது நேரடி அனுபவத்தை தணிகாசலமும் நிகழ்த்தினர்.
அத்துடன் சர்வதேச குற்றவியல் மற்றும் மனித உரிமைகள் சட்டம் போன்ற சட்டத்துறைகளில் சர்வதேச சட்ட நிபுணரான Toby Cadman , மற்றும் PEARL அமைப்பின் பிரதிநிதி அபிராபி ஆகியோரும் சிறப்புரைகள் ஆற்றினர்.