27 வயதான தமிழ் இளைஞனுக்கு கிடைத்த கோடிக்கணக்கான பணம்...! வரலாற்றில் மிகப்பெரிய பரிசு
வெளிநாட்டில் உள்ள நிறுவனத்தில் குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்து வந்த தமிழருக்கு கனவிலும் நினைத்து பார்க்க முடியாத மிகப்பெரிய பரிசுப் பணம் லொட்டரியில் கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்த காதர் ஹுசைன் என்ற 27 வயதான இளைஞர் சார்ஜாவில் உள்ள கார்களை கழுவி சுத்தம் செய்யும் நிறுவனம் ஒன்றில் மேற்பார்வையாளராக பணிபுரிகிறார். அவருக்கு மாதம் 1500டி.எச் சம்பளம் கிடைக்கிறது.
இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் டிப்ஸ் பணத்தை காதரும், அவரின் நண்பர் தேவராஜும் சேமித்து வைத்து அதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பிக் டிக்கெட் டிராவில் விளையாடியுள்ளனர்.
10,982,230,050.00 இலங்கை ரூபாய்கள்
கடந்த 3ஆம் திகதி லொட்டரி குலுக்கல் நடந்த போது தனது குடும்பத்தை பார்க்க சொந்த ஊருக்கு காதர் வந்தார். அதே சமயத்தில் லொட்டரியில் அவருக்கு Dh30 மில்லியன் (இ.ரூ.10982230050) பரிசு விழுந்திருக்கிறது.
காதர் ஊருக்கு வந்த காரணத்தால் பிக் டிக்கெட் தொகுப்பாளர்களான ரிச்சர்ட் மற்றும் பௌச்ராவால் அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை.
அதிர்ஸ்டவசமாக, நேரலையாக குலுக்களை (டிராவை) காதர் பார்த்து தனக்கு பெரிய பரிசு விழுந்ததை அறிந்ததும் உடனடியாக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு விமானத்தில் வந்து பரிசை பெற்றிருக்கிறார்.
தனது பிறந்தநாளுக்கு சில நாட்களுக்கு முன்னர் வெற்றி பரிசு விழுந்த டிக்கெட்டை காதர் வாங்கியிருக்கிறார்.
30 ஆண்டுகால வரலாற்றில் மிகப்பெரிய பரிசு
இது தொடர்பில் காதர் கூறுகையில், பரிசு பணத்தை என் நண்பர் தேவராஜுடன் பங்கிட்டு கொள்ளவுள்ளேன். பிக் டிக்கெட் போட்டியின் 30 ஆண்டுகால வரலாற்றில் மிகப்பெரிய பரிசு இதுவாகும்.
ஒரே இரவில் என் வாழ்க்கை மாறிவிட்டது, எனக்கு இவ்வளவு பணம் கிடைக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. இந்தியாவில் உள்ள எனது குடும்பத்தை இங்கு அழைத்து வர விரும்புகிறேன்.
எனது குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் வாடகை வீட்டில் வசிக்கிறேன், எனக்கும் எனது பெற்றோருக்கும் வீடு கட்டித் தருவேன் என கூறினார்.
காதர் தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு சொந்தமாக தொழில் தொடங்க திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.