தத்தளிக்கும் இலங்கைக்கு உதவ சிறப்புத் தீர்மானம்
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையர்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு இந்திய மத்திய அரசிடம் அனுமதி கோரும் தனித் தீர்மானம் தமிழக சட்டப் பேரவையில் இன்று வெள்ளிக்கிழமை (29) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில், இலங்கையில் நிலவும் நெருக்கடி விவகாரம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்தீர்மானத்தை கொண்டு வந்தார்.
நெருக்கடி காரணமாக இலங்கை மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு சிரமங்கள் குறித்து பேரவையில் விளக்கமளித்த ஸ்டாலின், அத்தியாவசிய மருந்துகள், எரிபொருள் மற்றும் உரங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்தார்.
முதலில் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு உதவிகள் செய்வதாக அறிவித்திருந்தேன். பல தமிழ் அரசியல் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஒரு சமூகத்திற்கு மாத்திரமன்றி அனைத்து இலங்கை மக்களுக்கும் உதவிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார்.
தற்போதைய நெருக்கடியின் காரணமாக அனைத்து மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் என அவர்கள் என்னிடம் தெரிவித்தனர், என்றார்.
தமிழ்நாடு தனியாக இந்த உதவிகளை வழங்க முடியாது. மத்திய அரசிடம் அனுமதி பெற்று இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலம் மட்டுமே இவற்றை விநியோகிக்க வேண்டும் என்றார்.
இது தொடர்பாக பிரதமர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். இருந்தும் அவர்களிடமிருந்து பதில் வரவில்லை. எனக் கூறியுள்ளார்.
