இலங்கையின் இனநெருக்கடியை புரிய தவறிய தமிழக அரசு : முரளிதரன் குற்றச்சாட்டு
உள்நாட்டுப் போரின் போது ஏற்பட்ட இன நெருக்கடியை தமிழக அரசு சரியாகப் புரிந்துகொள்ளத் தவறியதன் காரணமாகவே தேசத் துரோகம் இழைத்ததாக தன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக முத்தையா முரளிதரன் தெரிவித்தார்.
இந்திய சர்வதேச திரைப்பட விழாவுடன் இணைந்து நேற்று (26) கோவாவில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஒருபோதும் அஞ்சப்போவதில்லை
அன்றைய இலங்கையின் உண்மை நிலவரத்தை தமிழக அரசு புரிந்து கொள்ளத் தவறிவிட்டது என்று கூற தாம் அஞ்சப்போவதில்லை என்று கூறிய முத்தையா முரளிதரன், அதற்குக் காரணம் தமிழகத்திற்கும் இலங்கைக்கும் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன என குறிப்பிட்டார்.
அரசியல் ரீதியாக பிளவுபட்டுள்ள தமிழ்குழுக்கள்
இலங்கை தமிழ் சமூகத்தில் பல்வேறு துணைகுழுக்கள் உள்ளன.எல்லா குழுக்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை ஆனால் அவை அரசியல் ரீதியாக பிளவுபட்டுள்ளன என்று முரளிதரன் கூறினார்.
அந்தக் குழுக்களில் உள்ள சிலர் இலங்கையின் ஒரு பகுதியை பிரித்து தனி நாட்டை உருவாக்க விரும்புவதாகவும், ஆனால் பலர் அவ்வாறு செய்ய விரும்பவில்லை எனவும் முரளிதரன் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |