தமிழ் நாட்டில் குழந்தை பெறும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
தமிழகத்தில் குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவலொன்று வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் 2014 முதல் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் 34,497 பெண்கள், தங்களின் 18 வயதுக்கு முன்னதாகவே கருவுற்றதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் கூறுகிறது. மதுரை மாவட்டத்தில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் 3,000-க்கும் மேற்பட்ட சிறுமிகள் கருவுற்றதாக தெரியவருகிறது.
குழந்தைத் திருமணங்கள்
இதன்மூலம், இன்றளவும் குழந்தைத் திருமணங்கள் நடத்தப்படுவது தெரியவருவதாக மாநில தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறுவயதில் குழந்தைகள் பெற்றுக்கொள்வது, அவர்களின் உடல் மற்றும் மனநலனை பாதிக்கும் என்று மருத்துவர்களும் அறிவுறுத்துகின்றனர். பெரும்பாலான இடங்களில் குழந்தைத் திருமணங்கள் செய்வோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.
2 ஆண்டுகள்வரை சிறை
குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டத்தின்படி, 18 வயதுக்குக் குறைவான பெண்ணை திருமணம் செய்பவருக்கும், அதனை ஏற்பாடு செய்பவருக்கும் 2 ஆண்டுகள்வரை சிறையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படலாம்.
ஆனால், இந்தச் சட்டம் பல இடங்களில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.
இதேவேளை குழந்தைத் திருமணம் நடைபெறும் நாடுகளில் 6வது இடத்தில் இந்தியா உள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
