ரணிலின் சந்திப்பை புறக்கணித்த தமிழ் பொதுக் கட்டமைப்பு: வெளியான காரணம்
புதிய இணைப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தமிழ் பொதுக் கட்டமைப்பினை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதாக ஜனாதிபதி செயலகத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்திருந்த போதிலும் பேச்சுவார்த்தைக்கான காரணம் தெரிவிக்கப்படாமையினால் நாம் தற்போது நாளைய சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை என பொதுக்கட்டமைப்பின் முக்கியஸ்தரும் ஈ பி ஆர் எல் எப் செயலாளர் நாயகமுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran) தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், “ஜனாதிபதி செயலகத்திலிருந்து தமிழ் பொதுக் கட்டமைப்பினருடன் கலந்துரையாட வேண்டும் என்று அழைப்பு ஒன்று கிடைக்கப்பெற்று இருந்தது.
எனினும் என்ன காரணத்திற்காக இந்த அழைப்பு விடுக்கப்படுகிறது என்று கேட்டபோது அது தொடர்பில் அவர்கள் உரிய பதிலை வழங்காததுடன் அறிந்து கூறுவதாக தெரிவித்திருந்தனர்.
ஆகவே இதுவரை அவர்கள் அதற்கான காரணத்தினை எமக்கு அறிவித்திருக்கவில்லை. இந்நிலையில் ஒரு திட்டமிடப்படாமல் நாம் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதில் அர்த்தம் இல்லை என்பதன் காரணமாக நாளைய சந்திப்பில் கலந்து கொள்வதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம்.
எனினும் இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு மின்னஞ்சல் ஊடாக தகவல் ஒன்றினையும் அனுப்பி வைத்துள்ளோம்.” என்றார்
முதலாம் இணைப்பு
சிறிலங்கா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான (Ranil Wickremesinghe) பேச்சுவார்த்தையில் பங்கேற்காதிருக்க தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுக்கும் சிவில் சமூக தலைவர்களுக்கும் நாளை (12) ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்புக்கு ஜனாதிபதி செயலக பிரதிநிதிகளால் தொலைபேசி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
குறித்த சந்திப்பில், தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு என்ற அடிப்படையில் 14 உறுப்பினர்களும் கலந்து கொள்ள மாட்டார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் பொது வேட்பாளர் தெரிவு
தேர்தல் வேலைகளில் மூழ்கி இருப்பதால், குறுகிய கால அழைப்பின் அடிப்படையில் நாளைய சந்திப்பில் தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பாக கலந்து கொள்வது சிரமமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இது போன்ற அழைப்புகளை ஏற்று சந்திப்புகளில் கலந்து கொள்வது தொடர்பான முடிவை பொதுக் கட்டமைப்பு கூடி முடிவெடுக்கும் என தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்னர் தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் மூலம் தமிழ் பொது வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் (P. Ariyanethiran) அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |