ஒட்டுமொத்த உலகமுமே நிராகரித்த மொட்டுடன் பயணப்படும் யானையின் செயற்பாடு வேடிக்கையானது!
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண மாநகர சபையின் முதன்மை வேட்பாளராக தீபன் திலீசன் போட்டியிடவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இன்று கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“கட்சியின் மத்திய குழுவில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக கட்சியுடன் இணைந்து செயல்படுவதாலும் முக்கியமான காலகட்டத்திலும் கட்சியுடன் இணைந்து பயணித்ததன் அடிப்படையிலும் மத்திய குழுவில், யாழ் மாநகர சபையின் முதன்மை வேட்பாளராக அவர் களமிறக்கப்படவுள்ளார்.
புதிய நியமனங்கள்
மேலும் பிரதி முதல்வர் பதவிக்கு கட்சியின் நீண்ட கால உறுப்பினர் கிருபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை பொருளாதார நெருக்கடி நிலையில் மாநகர சபை எல்லைக்குள் வாழுகின்ற மக்களுக்கு ஒரு நேர்மையான பணியினை ஆற்றலாம் என கடைசி வரை எதிர்ப்பார்க்க முடியாது.
மாநகர சபை நிர்வாகம் நேர்மையான ஒரு பாதைக்குள் செல்லாமல், தங்களுக்கு நன்மையை தேடாமல், இருக்கின்ற வளங்களை வைத்து எந்த அளவுக்கு அதனை மக்களுக்கு திருப்திப்படுத்தி கொடுக்கலாம், இருக்கிற வளங்களை எவ்வாறு அதிகரித்து பங்களிப்பு செய்யலாமென்ற ஒரு மனப்பாங்குடன் ஒரு தரப்பு ஆட்சிக்கு வராமல் மாநகர சபைசெயற்பாட்டினை மாற்றியமைக்க முடியாது.
மக்களால் நிராகரிக்கப்பட்ட மொட்டுடன் யானை கூட்டு சேருவது வேடிக்கையான விடயம். அதேவேளை, வடக்கில் உள்ள நிலைமை போல் தான் தெற்கிலும் நிலைமை இருக்கும் வடக்கிலே தமிழ் தேசிய மக்கள் முன்னணியைத் தவிர மற்றைய அனைத்து தரப்புகளும் மக்கள் மட்டத்தில் செல்வாக்கை இழந்து கொண்டு போகின்றன.
இவ்வாறான கட்டத்திலே அவர்கள் நினைக்கின்றார்கள் பிரிந்து நின்றால் செல்வாக்கை கூட்டலாம் என்று அது மட்டும் தான் வித்தியாசம். யானை செல்வாக்கை முற்று முழுதாக இழந்திருக்கின்ற நிலையில் மொட்டுதேர்தலில் நிற்கவே முடியாத அளவுக்கு நிலைமை உள்ளது. யானை தேர்தல் காலத்திலே முற்று முழுதாக தூக்கி எறியப்பட்ட நிலையிலே அவர்கள் கூட்டு சேர்ந்தால் மக்கள் செல்வாக்கை எடுக்கலாமென்று நினைக்கிறார்கள்.
யதார்த்தத்திற்கு முரணான வகையிலே சிந்தித்து வெற்றி பெறலாம் என்று நினைத்து ஏதோ நடவடிக்கை எடுப்பதாக நினைக்கின்றார்கள். மக்களின் உண்மையான யதார்த்தம் மாறப்போவதில்லை மாறாக மக்கள் எப்படி பார்ப்பார்கள் என்றால் நாங்கள் செய்தி ஒன்றை அவர்களுக்கு கொடுக்கப் போகின்றோம் ஆனால் அவர்கள் விளங்கிக் கொள்கிறார்கள் இல்லை என சிந்திப்பார்கள்.
தெற்கிலே ராஜபக்சக்களுக்கு மக்கள் மத்தியில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலே ரணில் விக்ரமசிங்க மகிந்த ராஜபக்சவை கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பதனால் தான் தப்பித்துக் கொள்ளலாம் என நினைப்பது ஒரு வேடிக்கையான விடயமாகவே காணப்படுகின்றது. ஒட்டுமொத்தமாக உலகமே நிராகரிக்கின்ற, கடந்த தேர்தலிலே மூன்றில் இரண்டு பெரும்பான்மை எடுத்தற்காக மொட்டுடன் யானை கூட்டு சேருவது என்பது வேடிக்கையான விடயமாகும்” எனவும் தெரிவித்துள்ளார்.

