இந்தியப் பிரதமருக்குரிய கடிதத்தில் தமிழரசுக் கட்சியை தவிர்த்து தலைவர்கள் ஒப்பம்
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியும் தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்காக தயாரித்த கடிதத்தில் கட்சித் தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளனர். இந்தக் கடிதம் நாளைய தினம் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடம் கையளிக்கப்படவுள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
அதிபர் ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், இந்திய அரசாங்கம் தமிழர் விடயங்களில் அழுத்தம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ் தேசியக் கட்சிகளினால் கடிதங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்திய தூதுவரிடம் கையளிப்பு
இதற்கமைய, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியும் தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து தயாரித்த கடிதத்தில் கட்சிகளின் தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் இல்லத்தில் இன்றையதினம் கடிதத்தில் கையொப்பமிட்டனர்.
குறித்த கடிதத்தில் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனும் புளொட் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனும் ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனும் ஐனநாயக போராளிகள் கட்சி சார்பில் வேந்தனும் கையொப்பமிட்டனர்.
மேலும் ரெலோவின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடமும் தமிழ் தேசியக் கட்சி சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தாவும் கையொப்பமிட்ட பின்னர் குறித்த கடிதம் நாளைய தினம் வியாழக்கிழமை இலங்கைக்கான இந்திய தூதுவரிடம் கையளிக்கப்படவுள்ளது.
13ஆம் திருத்த நடைமுறை
குறித்த கடிதத்தில் இந்திய - இலங்கை ஒப்பந்ததின் பிரகாரம் கொண்டு வரப்பட்ட 13ஆம் திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், வடக்கு கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
