தமிழ் அரசியல் கைதி விடுதலை செய்யப்பட்டும் சிறையில் வாடும் அவலம்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு ஆயுட்தண்டனை விதிக்கப்பட்ட, தமிழ் அரசியல் கைதியான செல்லையா சதீஸ்குமார் விடுதலை செய்யப்பட்டுள்ள போதிலும், அவர் தொடர்ந்தும் சிறையில் வாடுவதாக குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
சுயாதீன ஊடகவியலாளரும் எழுத்தாளருமான சதீஸ்குமார் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்து சிறையிலேயே வாடுவதாக குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் ஐ.பி.சி தமிழுக்கு தெரிவித்துள்ளார்.
பொது மன்னிப்பு
தமிழ் அரசியல் கைதியான செல்லையா சதீஸ்குமார் உட்பட மூன்று தமிழ் அரசியல் கைதிகளுக்கு கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி அதிபரால் பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்டது.
அந்தவகையில், கடந்த 2011 ஆம் ஆண்டு ஆயுட் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட செல்லையா சதீஸ்குமாரால், உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன் முறையீட்டு மனு மீளப்பெறப்பட்டதை அடுத்து நேற்று அவர் விடுதலையானார்.
விவேகானந்தர் நகர் கிழக்கு, கிளிநொச்சியை வாழ்விடமாகக் கொண்டசதீஸ்குமார் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் நோயாளர் காவுவண்டியின் சாரதியாக கடமையாற்றியிருந்தார்.
2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பணி நிமிர்த்தம் கொழும்பு சென்ற இவரை வவுனியாவில் வைத்து காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.
செல்லையா சதீஸ்குமாரின் விடுதலை தாமதமாகின்றமை குறித்து குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் ஐ.பி.சி தமிழுக்கு இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
விடுதலைப் பத்திரம்
“அவருடைய மேன் முறையீட்டு மனு மீளப்பெறப்பட்டு, நீதிமன்றம் அவரை விடுதலையாக்கி இருக்கிறது.
இருந்தாலும், அந்த அறிக்கையில் கையொப்பமிட வேண்டிய நீதிபதிகள் இன்னும் கையொப்பமிடாததால் விடுதலைப் பத்திரம் சிறைச்சாலை நிர்வாகத்திற்கு இன்னமும் சென்றடையவில்லை. இதனால் அவருடைய விடுதலை தாமதித்துக்கொண்டிருக்கிறது.
அதற்கான ஒழுங்குகள் இன்றும் செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் இந்த நிமிடம் வரை அதற்கான சூழல் சாத்தியப்படவில்லை.
நான் இன்று அவரை சிறையில் சென்று பார்த்த போது, 15 வருடங்கள் சிறையில் வாடியதை விட, இந்த ஒரு மாதம் (பொது மன்னிப்பு வழங்கிய பின்னர்) சிறைக்குள் இருக்கும் ஒவ்வொரு நொடியும் தனக்கு கடூழிய சிறை தண்டனைக்கு மேலாக இருப்பதாக கூறுகிறார்” என்றார்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)