அநுர அரசாங்கத்தில் புறக்கணிக்கப்பட்ட சிறுபான்மையினர் : சிறிநேசன் எம்.பி கண்டனம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் (NPP) ''கிளீன் சிறிலங்கா'' ஆணைக்குழுவில் தமிழர்களோ முஸ்லிம்களோ உள்ளடக்கப்படவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் (G. Srinesan) தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் இன்று (23) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, ”பல்லின சமூகங்கள் உள்ள இலங்கையில் தமிழ் பேசும் சமூகத்தவர்கள் இடம்பெறாத நிலைப்பாடு தமிழ் பேசும் சமூகத்தவர் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் பேசும் பிரதிநிதிகள்
இவ்வாறுதான் கடந்த பொதுஜன பெரமுன (SLPP) அரசாங்கத்தின் காலத்தில் கோட்டாபய (Gotabaya Rajapaksa) ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட தொல்லியல் ஆணைக்குழு என்கின்ற, தமிழ் பேசும் மக்களுக்குத் தொல்லைகள் கொடுத்த ஆணைக்குழுவிலும் தமிழ் பேசும் பிரதிநிதிகள் இடம்பெறவில்லை.
பொதுஜன பெரமுன அரசும் தொல்லியல் ஆணைக்குழுவும் இனமத அடிப்படைவாத, அடிப்படையில்தான் அமைந்திருந்தது.
அதன் செயற்பாடுகளான தொல்லியல் இடங்களை இனங்காணும் செயற்பாடுகள் மற்றும் பௌத்த விகாரைகளை அமைக்கும் செயற்பாடுகளும் அடிப்படைவாத செயற்பாடுகளாகவே இருந்தன.
தற்போதைய தேசிய மக்கள் சக்தியால் அமைக்கப்பட்ட கிளீன் சிறிலங்கா (Clean Sri Lanka) ஆணைக்குழுவில், தமிழ் பேசுபவர் இடம்பெறாத நிலைமையும் சந்தேகத்தைத் தருகின்றன.
ஜனாதிபதி உறுதிப்படுத்த வேண்டும்
முதல் கோணினால் முற்றும் கோணும் என்கின்ற பழமொழியொன்று தமிழில் உண்டு. ஆயின், இந்த ஆணைக்குழுவில் தமிழர்கள், முஸ்லிம்கள் இடம்பெற வேண்டியது அவசியமாகும். இல்லாது விட்டால், குழுவின் செயற்பாடுகளிலும் சந்தேகம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.
எனவே, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் (Anura Kumara Dissanayake) தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் அடிப்படைவாதமற்ற தன்மையை ஆரம்பத்தில் இருந்தே உறுதிப்படுத்த வேண்டும்.
எது எப்படியாக இருந்தாலும் 75 ஆண்டுகளாக அடிப்படைவாதம், ஊழல், மோசடிகள், திருட்டுகள், இலஞ்சம் என்பவற்றால் நாசமாக்கப்பட்ட இந்நாட்டை சுத்தம் செய்ய வேண்டிய தேவை அவசியமானதாகும்.
சுத்தப்படுத்த வல்ல தமிழ், முஸ்லிம் பிரஜைகளும் இலங்கையில் உள்ளனர் என்பதை ஜனாதிபதி அநுர நினைவில் கொண்டு, செயலாற்ற வேண்டும்“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |