போராட்டக்காரர்களின் முழுமையான கட்டுப்பாட்டக்குள் வந்த அரச தலைவரின் மாளிகை! (காணொளி)
புதிய இணைப்பு
கொழும்பு கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் அரச தலைவர் மாளிகை வளாகத்திற்குள் பிரவேசித்துள்ளனர்.
இதேவேளை, அரச தலைவர் மாளிகை இப்போது போராட்டக்காரர்களின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது,
மூன்றாம் இணைப்பு
அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல் தடைகளை மீறி அரச தலைவர் மாளிகையின் வாயிலை அடைந்துள்ளனர்.
சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அங்கு கூடியுள்ள நிலையில், படையினர் பொல்லுகளுடன் தயார் நிலையில் உள்ளைமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
கொழும்பு அரச தலைவர் மாளிகைக்கு அருகே போராட்டக்காரர்களை கலைக்க வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வீதித்தடைகளை உடைத்து அரச தலைவர் மாளிகையினுள் செல்ல முயற்சித்த போது அவர்களை தடுக்கும் முகமாக இராணுவத்தினர் வானத்தை நோக்கி இரண்டு தடவைகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப்புகை தாக்குதலில் 2 காவல்துறையினர் உட்பட 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
கொழும்பில் அரச தலைவர் மாளிகைக்கு அருகில் செத்தம் வீதிப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் ஆயிரக்காண ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றுகூடி அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு போராட்டம் நடாத்தியுள்ளனர்.
இந்நிலையில், வீதித்தடைகளை அமைக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ள போது அவற்றை தகர்த்து எறியும் முயற்சியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாத காவல்துறையினர் அவர் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
உக்கரமடையும் போராட்டங்கள்
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி இன்று(09) பல அமைப்புகள் தலைநகரில் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில், கண்டி புகையிரத நிலையத்தில் இருந்து புகையிரதம் ஒன்று "கோ கோம் கோட்டா - ரணில்" என பதாகை ஒன்றை புகையிரத்தத்தின் முன் கட்டியவாறு போராட்டக் காரர்களை ஏற்றி கொழும்பு நோக்கி பயணிக்கின்றது .
மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியமும் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் சிறிலங்கா சுகந்திர கட்சி ஆகிய அரசியல் கட்சிகளும் அரச தலைவர் மாளிகை முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.