இந்தியாவில் தடம்பதிக்கவுள்ள டெஸ்லா!
இந்தியாவுக்கு (India) ஏற்றுமதி செய்வதற்காக ஜெர்மனியில் (Germany) உள்ள டெஸ்லா (Tesla) நிறுவனத்தின் ஆலையில் மகிழுந்து உற்பத்தி ஆரம்பமாகியுள்ளது.
இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் இந்தியாவுக்கான மகிழுந்து ஏற்றுமதி நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக டெஸ்லா நிறுவனத்தின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மகிழுந்து சந்தை
உலகின் மூன்றாவது பெரிய மகிழுந்து சந்தையைக் கொண்டுள்ள இந்தியாவில், டெஸ்லா விரைவில் களமிறங்கவுள்ளது.
இதற்காக சுமார் 2 பில்லியன் டொலர் பணத்தை டெஸ்லா முதலீடு செய்யும் என கூறப்படுகிறது.
இந்தியாவில் மகிழுந்து உற்பத்தி ஆலை அமைப்பதற்குப் பொருத்தமான தளங்களை ஆய்வு செய்வதற்காக டெஸ்லாவின் குழு இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு பயணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி வரி
இந்தியா கடந்த மாதம் சில மின்சார வாகன உற்பத்தியாளர்களின் இறக்குமதி வரியைக் குறைக்க முன்வந்தது.
இந்தியாவில் குறைந்தபட்சம் 500 மில்லியன் டொலர் முதலீடு செய்து, மூன்று ஆண்டுகளுக்குள் உற்பத்தியைத் தொடங்கினால், வரி குறைப்பு செய்யப்படும் என மத்திய அரசு கூறியது.
டெஸ்லா நிறுவனம் பல மாதங்களாக இந்தியாவின் இறக்குமதி வரி வீதம் குறைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வந்த நிலையில், மத்திய அரசு இந்த சலுகையைக் கொடுக்க முடிவு செய்துள்ளது.
டெஸ்லாவின் ஏற்றுமதி
இந்த நிலையில், டெஸ்லா எந்த வகையான மகிழுந்தை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது என்பது குறித்த தகவல் இதுவரை தெரியவில்லை.
ஜெர்மனியின் பெர்லினுக்கு அருகிலுள்ள டெஸ்லாவின் தொழிற்சாலையில் வை (Y) வகை மகிழுந்து மட்டுமே தற்போது உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்தியாவின் புதிய கொள்கையின்படி, வாகன உற்பத்தி நிறுவனங்கள் குறைந்த வரி வீதத்தில் ஆண்டுக்கு 8 ஆயிரம் கார்களை இறக்குமதி செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |