தாரைவார்க்கப்படபோகும் யாழின் மற்றுமொரு தொன்மை நிலம்! வலுக்கும் கண்டனம்
பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகளினால் தான் பழைய பூங்கா குதறப்பட்டு கொண்டிருக்கிறது என யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்நகர பழைய பூங்கா(Old park Jaffna) அதில் உள்ளக விளையாட்டரங்கு அமைப்பது விடயத்தில் மிகப்பலமான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டிருப்பதுடன் தற்போது எதிர்ப்பாளர்களில் ஒரு சாரார் நீதிமன்றத்தையும் நாடியுள்ளனர்.
குறுகிய சிந்தனை
இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட செயலராக சிறிதுகாலம் (14 மாதங்கள்) பணியாற்றியவன் என்றவகையில் இந்த பழைய பூங்கா பற்றிய எனது கரிசனையையும் எமது அதிகாரிகளினதும் அரசியல்வாதிகளினதும் குறுகிய சிந்தனைகளையும் பற்றிப்பகிர்ந்து கொள்ளலாமென எண்ணுகிறேன்.
யாழ்ப்பாணப் பழையபூங்கா கொண்டிருந்த சிறப்பையும் அதன் தொன்மையையும் பெறுமதியையும் அறிந்து கொள்ளாது, அபிவிருத்தி என்ற போர்வையில் எமது இளைய சமுதாயம் மட்டுமன்றி கற்றறிந்தோர் சமுகம் எனக்கூறிக்கொள்ளும் ஒரு சாரார், பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகள் போன்றோர் இத்தகைய பதிலீடற்ற பெரும் சம்பத்துக்கள் பறிபோவதைப்பற்றி எந்தவித கவலையுமின்றி வாழ்ந்துகொண்டிருப்பது வருத்தமளிக்கின்றது.
ஆட்சிக்கு வரும் அரசுகளும் அவர்களால் நியமிக்கப்படும் ஆளுனர்களும் தமக்குரிய அதிகாரங்களை மக்கள் நலனுக்காகவன்றி அம்மக்களின் எதிரகாலத்தைக் கருத்தில் கொள்ளாது அவரவர் தனிப்பட்ட அபிலாசைகளுக்காகவும் அரசியல் நோக்கங்களுக்காகவும் தான்தோன்றித்தனமாகப் பிரயோகிப்பதும் அதனை எதுவித ஆட்சேபனையுமின்றி அதிகாரிகள் சிரமேற்கொண்டு செயற்படுத்துவதும் நாம் எமது நிருவாக வரலாற்றில் தரிசித்த உண்மைகள்” என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |