நடுவானில் நடந்த சம்பவம் : வெளிநாட்டிலிருந்து வந்தவர் கட்டுநாயக்காவில் கைது
குவைத்தில்(kuwait) இருந்து கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு வந்த இலங்கை விமானத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த விமான பணிப்பெண்ணை கடுமையான வார்த்தைகளால் திட்டிய பயணியை கட்டுநாயக்கா விமான நிலைய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-230 குவைத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து இன்று (30) அதிகாலை 02:00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு புறப்பட்டுள்ளது.
சிறிலங்கன் எயார்லைன்ஸ்
அந்த விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருவதற்காக ஹொரணையை சேர்ந்த 35 வயதுடைய நபர் 11 G ஆசனத்தில் அமர்ந்திருந்தார். இந்த விமானம் புறப்பட்டு 03.30 மணித்தியாலங்களுக்குப் பின்னர் பயணிகளுக்கு உணவு மற்றும் பானங்கள் பரிமாறப்பட்டன.
அங்கு, விமானப் பயணியின் உணவுப் பாத்திரங்களை விமானப் பணிப்பெண் அகற்ற முனைந்தபோது, அவரது இடது கையால், மணிக்கட்டுக்கும் முழங்கைக்கும் இடையில் பிடித்து, கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார். இது குறித்து விமானப் பணிப்பெண் உடனடியாக விமான ஊழியர்களுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுத்ததுடன் அவர்களும் விமானிக்கு தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதன்படி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இது தொடர்பில் அறிவிக்க விமானி நடவடிக்கை எடுத்ததுடன், இந்த விமானம் இன்று 30 ஆம் திகதி காலை 08.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர், சிறிலங்கன் எயார்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை அதிகாரிகள் குழுவினர் பயணியை கைது செய்துள்ளனர்.
காவல் நிலையத்தில் மாரடைப்பு
கைது செய்யப்பட்ட பயணிக்கு விமான நிலைய காவல் நிலையத்தில் மாரடைப்பு ஏற்பட்டு தற்போது நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு தகாத முறைக்கு உள்ளான விமானப் பணிப்பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியிடம் காவல்துறையினர் அனுமதித்துள்ளனர்.
இதற்கிடையில், பயணியின் மனைவி முறைப்பாடு அளித்து, தனது கணவர் விமான ஊழியர்களால் தாக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார்.
தனது கணவர் 14 வருடங்களாக குவைத்தில் உள்ள கொரிய நூடுல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருவதாகவும், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதால், அவ்வப்போது கொழும்பு வந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
வான்வெளியில் இடம்பெற்ற சம்பவம் என்பதால் பயணியை கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் முற்படுத்த உள்ளதாகவும், அவருக்கு பிணை வழங்க சட்டமா அதிபர் தீர்மானிக்க வேண்டும் எனவும் கட்டுநாயக்க விமான நிலைய காவல் நிலையத் தளபதி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |