நேபாள பெருவெள்ளத்திற்கான உண்மையான காரணம் வெளியானது! விஞ்ஞானிகளின் புதிய அறிக்கை
நேபாளத்தின் லங்டாங் லிரங் (Langtang Lirung) சிகரத்தில் ஏற்பட்ட பிரம்மாண்ட பனிப்பாறை சரிவே அண்மையில் நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளப்பெருக்கிற்கு முக்கியக் காரணம் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
ஆரம்பத்தில் இந்தத் பேரிடருக்கு நிலநடுக்கமோ அல்லது பனியாற்று ஏரி உடைப்போ (GLOF) காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.
எனினும், செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்த நேபாள விஞ்ஞானிகள் குழு, அங்கு ஏரி உடைப்போ அல்லது நிலநடுக்கமோ நிகழவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
நிலநடுக்கத்திற்கு இணையான அதிர்வு
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, சுமார் 5,200 மீற்றர் உயரத்தில் இருந்த பனி மற்றும் பாறைகள் அடங்கிய பெரும் பகுதி திடீரெனச் சரிந்து, சுமார் 2,900 மீற்றர் உயரத்திற்குச் செங்குத்தாகக் கீழே விழுந்துள்ளது. இதுவே ரிக்டர் அளவில் 5.2 நிலநடுக்கத்திற்கு இணையான அதிர்வை உருவாக்கியுள்ளது.

வெறும் 7 நிமிடங்களுக்குள் மணித்தியாலத்திற்குச் சராசரியாக 167 கிலோமீற்றர் வேகத்தில் பாய்ந்து வந்த இந்த சிதைவுகள் 22 கிலோமீற்றர் தொலைவைக் கடந்து அஸ்வகந்தா பகுதியை அடைந்துள்ளன.
3,000-க்கும் மேற்பட்டோர் மாயம்
இவ்வாறு சரிந்து விழுந்த பாறைகளும் பனிக்கட்டிகளும் ஆற்றின் குறுக்கே தடைகளை ஏற்படுத்தியதால் புதிய தற்காலிக ஏரிகள் உருவாகி ஆற்றின் இயல்பான பாதையே மாறியிருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் இதுவரை 900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 3,000-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |