இதுதான் 2023 ஆம் ஆண்டிற்கான உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டா?
இறுதியாக 2017ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையின் பின் ஆறு ஆண்டு கால மாற்றங்களிற்குப் பின்னர் உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டைக் கொண்ட நாடாக சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் உத்தியோகபூர்வ தரவுகளின் அடிப்படையில், 2023 ஆம் ஆண்டிற்கான தரவரிசையின்படி இந்த முடிவு அமைந்துள்ளது.
சிங்கப்பூர் முதலிடத்தில்
சிங்கப்பூர் மக்கள் உலகிலுள்ள 227 பயண இடங்களில் விசா இல்லாமல் செல்லக் கூடியதாக உள்ள நிலையில் சிங்கப்பூர் முதலிடத்தை பிடித்துள்ளது.
190 இடங்களிற்கு விசா இல்லாமல் செல்லக் கூடிய உரிமம் உள்ள கடவுச்சீட்டினைக் கொண்டிருப்பதனால் ஜேர்மன், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் 2ஆம் இடத்தைப் பிடித்துள்ளன.
5 ஆண்டுகளாக முதலிடத்தில்
இந்த வரிசையிலே 189 இடங்களுக்கான விசா இன்றிய அனுமதியைக் கொண்டுள்ள கடவுச்சீட்டினை உடைய ஜப்பான், ஆஸ்திரியா, பின்லாந்து, பிரான்ஸ், தென்கொரியா மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் 3ஆம் இடத்தினைப் பிடித்துள்ளன.
இதில் கடந்த 5 ஆண்டுகளாக முதலாவது இடத்தை தன்னகத்தே தக்கவைத்திருந்த நாடாக ஜப்பான் விளங்கியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
பின்தங்கிய இடத்தை பிடித்திருந்த ஐக்கிய இராச்சியம் இப்போது 4ஆவது இடத்திற்கு முன்னேறி இருப்பதும், 2014ஆம் ஆண்டு காலத்தில் முதலாம் இடத்தில் தடம் பதித்திருந்த அமெரிக்கா இப்போது 10 ஆவது இடத்திற்கு பின்னோக்கியும் சென்றுள்ளது.
59 ஆவது இடத்தில் சிறிலங்கா
இதில் சிறிலங்கா 59ஆவது இடத்தை பிடித்துள்ளது என்பது ஓர் சிறப்பம்சமாகும்.
இந்த வரிசையில் ஆபிகானிஸ்தான், சிரியா, ஈராக் ஆகிய மூன்று நாடுகளின் கடவுச்சீட்டுகளும் பலவீனமான கடவுச்சீட்டுகள் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
உலக மக்களின் சுற்றுலா சுதந்திரத்தினை பேணுதல் அல்லது அதிகரிப்பதை நோக்கமாக கொண்டே இந்த ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டு முறை டொக்டர் கிரிஷ்யன் எச்.கெய்லின் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது முக்கியமான விடயமாகும்.