தந்தை செல்வா சதுக்கத்தில் தொடர் திருட்டு - முறைப்பாட்டை கண்டுகொள்ளாத காவல்துறை!
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் தொடர்ச்சியாக திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
இந்த திருட்டுத் தொடர்பில் தொடர்ச்சியாக காவல்துறையினருக்கு முறைப்பாடு வழங்கியும் அவர்கள் இது தொடர்பில் எந்த வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லையென பராமரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தந்தை செல்வா சதுக்கம், யாழ்ப்பாண காவல் நிலைய முன்றலிலேயே அமைந்துள்ளது. இருப்பினும் அங்கு தொடர்ச்சியாக திருட்டு சம்பவம் இடம்பெறுவதாகவும் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
தொடர் திருட்டு
அதற்கமைய தந்தை செல்வா சதுக்கத்தில் நீண்ட காலமாக மின் இயந்திரம் திருடப்பட்டதாகவும், மூன்று தடவைகளாக ரூபாய் 75 ஆயிரம் பெறுமதியான மின் இயந்திரம் திருடப்பட்டுள்ளது எனவும் தந்தை செல்வா சதுக்க பராமரிப்பாளர்கள் கவலை வெளியிட்டுள்ளார்கள்.
இவ்வாறான நிலையில் தான் தந்தை செல்வா சதுக்கத்தில் பொருத்தப்பட்டிருந்த 80 அடி நீளமான இடி தாங்கி மற்றும் அதற்குரிய செப்பிலான இணைப்பு ஆகியன திருடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல்துறையின் பாராமுகம்
இந்தத் தொடர் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் யாழ்ப்பாண காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும் இது வரை காவல்துறையினர் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்றும் தந்தை செல்வா சதுக்கத்தின் நலன்விரும்பிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
