தாயின் முன்நிலையில் மகளைக் குதறினார்கள்...!
ஈழத்தில் இந்தியப் படையினர் மேற்கொண்ட வன்புணர்வுச் சம்பவங்கள் பற்றி எழுதப் புற்பட்டால் நூற்றுக்கும் அதிகமான அத்தியாயங்கள் எழுத முடியும்.
அத்தனை அட்டூழியங்களை அவர்கள் அங்கு நிகழ்த்திச் சென்றிருக்கின்றார்கள். தேவை கருதி ஏற்கனவே வெளிவந்துள்ள ஒரு சில சம்பங்களை மட்டும் இத்தொடரில் மிகவும் சுருக்கமாகப் பார்த்து வருகின்றோம்.
இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு காலத்தில் இடம்பெற்ற பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் பற்றி யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் ஒரு நீண்ட ஆய்வை பதிவு செய்திருந்தார்கள்.
அந்த ஆய்வில் வெளியிடப்பட்ட சம்பவங்கள் மிகவும் அதிர்ச்சியூட்டக்கூடியவை. காந்தியின் தேசத்தையும், ரஜீவ்காந்தியின் புதல்வர்களையும் வெட்கித் தலைகுனிய வைக்கக்கூடிய பதிவுகள் அவை.
தாயின் முன்னிலையில்…
ஒரு சுருட்டுச் சுத்தும் தொழிலாழியின் மகளுக்கு நேர்ந்த கொடூரம் இது. அவளுக்கு 18 வயது. கா.பொ.த. உயர் தரம் வரை அவள் படித்திருந்தாள்.
கோழி பிடிப்பதற்காக அந்த வளவிற்குள் வந்த இரண்டு இந்தியப் படையினர் அந்த மாணவியைக் கண்டுவிட்டனர். தந்தை ஏதோ காரியமாக வெளியில் சென்றுவிட தாயும் மகளும் மட்டுமே அன்றையதினம் வீட்டில் இருந்தார்கள்.
துப்பாக்கியை நீட்டியபடி தாயை அழைத்துச் சென்ற ஒரு கயவன் அந்த தாயை துப்பாக்கி முனையில் நிறுத்திவைத்தான். மற்றவன் மகளை இழுத்துச் சென்று, கூச்சலிட்டால் தாயைச் சுட்டுக் கொன்றுவிடுவோம் என்று மிரட்டினான்.
தாய் கொல்லப்பட்டுவிடுவாள் என்ற பயத்தில் மகள் வாய் திறக்கவில்லை. தாயின் முன்னிலையிலேயே மகள் கொடூரமாகக் குதறப்பட்டாள். அமைதியாக அனைத்தையும் பொறுத்துக்கொண்டிருந்த அந்த மாணவி, அந்த விடயத்தை அத்துடன் விட்டுவிடவில்லை.
ஒரு சில ஊரவர்களின் துணையுடன் மறுநாள் இந்திய இராணுவ அதிகாரிகளைச் சந்தித்து, தனக்கு நேர்ந்த கொடுமைகளை எடுத்துரைத்ததுடன், தனக்கு கொடுமை இழைத்த இந்தியப் படை வீரர்களையும் சரியாக அடையாளம் காண்பித்து அவர்களுக்கு தண்டணையும் பெற்றுக் கொடுத்தாள்.
கப்டனின் மிரட்டல்
1987ம் ஆண்டு நவெம்பர் மாதம் 6ம் திகதி இடம்பெற்ற மற்றொரு சம்பவம் இது. விவசாயக் குடும்பத்தில் பிறந்த பாடசாலை மாணவி ஒருவரை இந்தியப் படையினர் கைது செய்திருந்தார்கள். ஒரு புகைப்படம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுவதற்கென்று கூறியே அவளை இந்தியப் படையினர் கைது செய்திருந்தார்கள்.
இந்தியப் படையினர் தம்முடன் ஒரு புகைப்படத்தை வைத்திருந்தார்கள். அந்தப் புகைப்படத்தில் அந்த மாணவியும், அவளது பாடசாலைச் சினேகிதியும் காணப்பட்டார்கள்.
அந்தச் சினேகிதியின் சகோதன் ஒரு விடுதலைப் புலி உறுப்பினர் என்பதே இந்தியப் படையினரை உறுத்தியிருந்த விடயம். குறிப்பிட்ட அந்த இளைஞன் தற்பொழுது எங்கே என்று விசாரிப்பதற்காகவே அந்த மாணவியை இந்தியப் படையினர் கைது செய்திருந்தார்கள்.
விசாரணைக்கென்று அவளை அழைத்துச் சென்ற இந்தியப் படையினர், “குறிப்பிட்ட அந்த வாலிபன் உன்னுடைய காதலனா? என்று கேள்வியை எழுப்பி விசாரித்தார்கள். குறிப்பாக இந்த விடயம் தொடர்பாக விசாரணையை மேற்கொண்ட இந்தியப் படைக் கப்டன், அந்த வாலிபன் எங்கிருக்கின்றான் என்ற உண்மையைக் கூற மறுத்தால், அந்த மாணவியை வன்புணர்வு செய்யப்போவதாக மிரட்டினான்.
உண்மையக் கூறத்தவறும் பட்சத்தில் அவளை எப்படி எப்படியெல்லாம் துன்புறுத்துவார்கள் என்றும் அவன் விபரித்தான். பின்னர் அந்தச் சிறுமியை வீட்டில் கொண்டு வந்து விட்டுவிட்டு 24 மணி நேரம் அவகாசம் கொடுத்து, அந்தக் காலக்கெடுவிற்குள் உண்மையைச் சொல்லிவிடவேண்டும் என்று எச்சரித்தும்விட்டு சென்றுவிட்டான்.
சிறிது நேரத்தின் பின்னர் இரண்டு சிப்பாய்கள் அங்கு வந்தார்கள். அவர்கள் முன்னர் அந்த இந்தியப் படைக் கப்டனுடன் உடன் வந்திருந்தவர்கள். கப்டன் அந்தச் சிறுமியை வீட்டில் கொண்டு வந்து விட்டுவிட்டுச் சென்றபோது கப்டனுடன் கூடவே சென்று விட்டு, பின்னர் அந்தக் கப்படனுக்குத் தெரியாமல் தனியாகத் திரும்பி வந்திருந்தார்கள்.
பெற்றோரை ஒரு பக்கத்தில் நிறுத்திவிட்டு, அந்தச் சிறுமியை மட்டும் விசாரணைக்கு என்று கூறி, ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றனர்.
கொடூரமாகப் வன்புணர்வு புரிந்தனர். வேதனையில் துடிதுடித்த அந்தச் சிறுமியிடம், நாங்கள் நாளையும் வருவோம். நடந்ததை வெளியில் யாரிடமும் சொல்லக் கூடாது என்று எச்சரித்து விட்டுச் சென்றார்கள். அச்சமடைந்த அந்தப் பெண் கினற்றிற்குள் குதித்துவிட்டாள்.
தெய்வாதினமாக அயலவர்கள் அவளைக் காப்பாற்றியிருந்தார்கள். அங்கு நடந்த அல்லோல்லகல்லோல்லத்தை முகாமில் இருந்து அவதானித்த இந்தியப் படை இராணுவக் கப்டன் அங்கு வந்தான். அவனுடன் அந்தப் பெண்ணை வன்புணர்வு புரிந்த இரண்டு சிப்பாய்களும் அங்கு வந்திருந்தார்கள்.
தான் பயமுறுத்தியதால்தான் அந்தப் பெண் கிணற்றில் குதித்திருக்கவேண்டும் என்று நினைத்த அந்தக் கப்டன், அந்தச் சிறுமியின் தலையைத் தடவி, தான் பயமுறுத்தியது போன்று எதுவும் செய்யப்போவதில்லை என்றும் ஏதாவது பிரச்சினை இருந்தால் தன்னிடம் கூறும்படியும் கேட்டான். அந்தச் சிறுமியை வன்புணர்வு புரிந்த இரண்டு சிப்பாய்களும் கப்டனுடன் இருந்ததால், கப்டனிடம் அவள் உண்மையைச் சொல்லவில்லை.
பின்னர் அந்தப் பெண்ணை பெற்றோர்கள் டாக்டரிடம் அழைத்துச் சென்றார்கள். அவளைப் பரிசோதித்த டாக்டர் அவளுக்கு நடந்த கொடுமைகளை கண்டறிந்து, குறிப்பிட்ட கப்டனிடம் முறையிட்டு, அந்தச் சிப்பாய்களுக்குத் தண்டணை வாங்கிக் கொடுத்தார்.
ஆண்களுக்கும் தொல்லை
ஈழத்தில் இந்தியப் படையினரின் பாலியல் சேஷ்டைகள் பெண்களுடன் மட்டும் நின்றுவிடவில்லை.
அவர்கள் தமது காமப் பசிக்கு ஆண்களையும், சிறுவர்களையும் இரையாக்கிக் கொண்ட பல சம்பவங்களும் இங்கு இடம்பெற்றிருந்தன. பெண்கள் தொடர்பாக இடம்பெற்றிருந்த துன்புறுத்தல்கள் அளவிற்கு இந்த விடயம் தீவிரமாக வெளிவந்து வெளியாரின் கவனத்தை ஈர்க்கவில்லை என்றாலும், இந்தியப் படை ஜவான்கள் ஈழத்தில் சிறுவர்கள் மீதும், ஆண்கள் மீதும் மேற்கொண்ட பாலியல் துர்நடத்தைகள் பற்றியும் நாம் இத்தொடரில் மேலோட்டமாகப் பார்த்தேயாகவேண்டும்.
ஈழத்தில் இந்தியப் படையினர் பாலியல் ரீதியாகப் புரிந்த கொடுமைகள் வரிசையில், பல விடயங்கள் வெளியில் சொல்ல முடியாதவை. எழுத்தில் எழுத முடியாத, விபரிக்க முடியாத பல பாலியல் கொடுமைகள், சேஷ்டைகள் ஈழத்தில் இந்தியப் படையினர் வசம் இருந்த சிறைகளில் நடந்திருந்தன.
குறிப்பாக இந்தியப் படையினரின் சிறைகளில் அடைத்துவைக்கப்பட்டிருந்த ஆண் கைதிகள் கூட, சிறைக் காவல் கடமைகளில் ஈடுபடும் இந்தியப் படையினரின் பாலியல் அசிங்கங்களுக்கு ஈடுகொடுக்கவேண்டிய துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்ததாக, இந்தியப் படையினரின் சிறைக் கொடுமைகளை அனுபவித்த பலர் சாட்சி பகர்கின்றார்கள்.
மனைவியாக…
இந்தியப் படையின் ஈழத்தில் அமைத்திருந்த சிறை ஒன்றில் ஒரு சில நாட்கள் அடைத்துவைக்கப்பட்டிருந்த ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளர் இவ்வாறு தெரிவிக்கின்றார்.
சிறைச்சாலையில் எனது அறைக்கு அடுத்து இருந்த அறையில் ஒரு இளம் பெடியனும் அடைத்து வைக்கப்பட்டிருந்தான். பெடியன் கொஞ்சம் வெள்ளை. அழகாக, துருதுருவென்று இருப்பான்.
இந்தியப் படையினர் இரவில் அந்தப் பெடியனை அறையில் இருந்து அழைத்துச் சென்றுவிடுவார்கள். ஆரம்பத்தில் எனக்கு எதுவும் புரியவில்லை. விசாரணைக்காகவே அவனை அழைத்துச் செல்வதாகவே நினைத்து பரிதாபப்படுவேன். பின்னரே அங்கிருந்த மற்றவர்கள் மூலம் எனக்கு உண்மை தெரியவந்தது.
அந்தச் சிறைச்சாலையில் உள்ள ஒரு அதிகாரிக்கு இரவு முழுவதும் மனைவியாகச் செயற்படுவதற்காகவே அந்தப் பெடியனை இந்தியப் படையினர் அழைத்துச் செல்வதாக அங்கிருந்தவர்கள் பேசிக்கொண்டார்கள்.
அவனுக்கு சிறையில் நல்ல செல்வாக்கு. பல விஷேட சலுகைகள். சிறைக் கொடுமைகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும், விரைவில் விடுதலை பெற்றுச் செல்வதற்காகவும், அதுவரை அங்கு கிடைக்கும் சலுகைகளை அனுபவிப்பதற்காகவும் அவன் வேறு வழியில்லாமல் இந்தக் கொடுமைகளுக்கு இணங்கிப் போவதாக அங்கிருந்த அவனது வயதை ஒத்த பெடியன்களிடம் தெரிவித்திருந்தான்.
சப்பாத்திக் குறுமா…
இந்தியச் சிறைகளில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் பற்றி கருத்துத் தெரிவித்த ஒரு இளைஞன், புலிகளுடன் தொடர்பு இருந்ததற்காக கைதுசெய்யப்பட்ட தான், பல தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டதாகவும் பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் தெரிவித்தான்.
மட்டக்களப்பு ஊறணியில் இருந்த மன்றேசா இந்தியப் படை முகாமில் தான் தடுத்துவைக்கப்பட்டிருந்த போது தனக்கு ஏற்பட்ட அனுபவமே மிகவும் கொடுமையானது என்று அவன் தெரிவித்திருந்தான்.
விசாரணைக்கென்று தம்மை அழைக்கும் இந்தியப் படைச் சிப்பாய்கள், அவர்களது ஆண் உறுப்புக்களில் பழச்சாற்றைத் தடவி விட்டு, அதனைச் சுவைக்கும்படி கூறி தொந்தரவு செய்ததாகவும், சில விசாரணைகளின் போது, தங்களுடைய ஆண் உறுப்புக்களில் காரம் மிகுந்த சப்பாத்திக் குறுமாவைத் தடவி விட்டு, அவர்கள் வளர்க்கும் நாய்களை அருகில் அழைத்து வந்து தமது உறுப்புக்களைக் கடித்துக் குதற வைக்கப்போவதாக மிரட்டி உண்மைகளை வரவழைத்ததாகவும் அவன் தெரிவித்திருந்தான்.
மற்றொரு இளைஞன் கூறுகையில், சில சந்தர்ப்பங்களில் மது போதையில் இருக்கும் இந்தியச் சிப்பாய்கள் சிறையில் இருந்த தங்களில் சிலரை அழைத்து முழு நிர்வாணமாக்கி, ஒருவருடன் ஒருவர் மிகக் கேவலமாக நடந்துகொள்ளம்படி நிர்பந்தித்து அதனைப் பார்த்து ரசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகவும் அந்த இளைஞன் தெரிவித்திருந்தான்.
முகாம்களின் அருகில்..
இந்தியப் படையினரின் முகாம்களின் அருகில் இருந்த வீடுகளில் வசித்து வந்த சிறுவர்களையும் சில இந்தியப் படையினர் விட்டுவைக்கவில்லை.
மாலை நேரங்களில் கிரிக்கட், கரப்பத்து என்று அங்கு விளையாடச் செல்லும் சிறுவர்களில் சிலரை சில இந்தியப் படை ஜவான்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வடக்குகிழக்கில் ஆண்களுக்கு எதிராக இந்தியப் படையினர் புரிந்த பாலியல் சேஷ்டைகளை ஒரு அளவிற்கு அதிகமாக விபரிப்பது அத்தனை நாகரீகமாக இருக்காது.
அதனால் ஓரிரு சம்பவங்களை மட்டும் உதாரணத்திற்கு இங்கு பார்த்திருந்தோம். இனி, இந்தியப் படையினர் ஈழமண்ணில் எமது சகோதரிகள்; மீது மேற்கொண்ட பாலியல் கொடுமைகள் பற்றிய மேலும் ஓரிரு பதிவுகளை மட்டும் பார்ப்போம்.
கிணற்றில் மிதந்த சடலம்
அவளுக்கு வயது முப்பது. திருமணம் ஆகியிருக்கவில்லை. 1987ம் ஆண்டின் ஆரம்பத்தில் சிறிலங்கா இரணுவத்தின் ஷெல் தாக்குதலுக்கு அவளது தாயும், தந்தையும் பலியாகியிருந்தார்கள்.
அவளும் வேறு இரண்டு பெண்களும் அந்த வீட்டில் தங்கியிருந்தார்கள். இந்தியப் படைவீரர்கள் வந்து கதவைத் தட்டினார்கள். கதவைத் திறப்பதா, வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது, கதவை உடைத்துக்கொடு இந்தியப் படை வீரர்கள் பலர் உள்ளே நுழைந்தார்கள்.. அந்த வீட்டில் இருந்த மற்றைய இரண்டு பெண்கள் எங்கோ ஓடித்தப்பிவிட்டார்கள்.
சற்றுப் பெரிய பழங்காலத்து வீடு. தட்டுமுட்டுச் சாமான்களும் அங்கு அதிகம். கருமையான இருள் வேறு. அந்தப் பெண்களால் ஓடி மறைந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்ள முடிந்தது.
ஆனால் அந்த 30 வயதுப் பெண் மட்டும் இந்தியப் படையினரிடம் அகப்பட்டுக்கொண்டாள். பின்னர் அந்தப் பெண்ணின் சடலம் அந்த வீட்டுக் கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
பிரேதப் பரிசோதனை மேற்கொண்ட சட்ட மருத்துவ அதிகாரி, அந்தப் பெண் மீது பாலியல் வன்முறை பிரயோகிக்கப்பட்டதற்கான தெளிவான அடையாளங்கள் இருப்பதாக தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
கொடுமைகள் இன்னும் தொடரும்…
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்... |