தியாகதீபம் திலீபனுடைய 36 ஆவது ஆண்டு நினைவையொட்டி முல்லைத்தீவில் மாபெரும் கவிதைப் போட்டி!
தமிழ் மக்களின் சுபீட்சமான வாழ்வுக்காக 1987 ம் ஆண்டு நல்லூர் வீதியில் பன்னிரெண்டு நாட்கள் நீராகாரம் ஏதுமின்றி உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த தியாக தீபம் திலீபனுடைய 36 ஆவது ஆண்டு நினைவையொட்டி தாயக மற்றும் புலம்பெயர் நினைவேந்தல் குழுவினால் மாபெரும் கவிதைப் போட்டியொன்று நடைபெற்று வருகின்றது.
குறித்த போட்டி இன்று (24) முல்லைத்தீவில், முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகளை சேர்ந்த போட்டிக்காக ஏற்கனவே விண்ணப்பித்த மாணவர்களுக்கான போட்டியாக இடம்பெற்றுவருகிறது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் உள்ள ரேடியன் முன்பள்ளி வளாகத்தில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் தாயக மற்றும் புலம்பெயர் நினைவேந்தல் குழுவின் தாயக இணைப்பாளர் தம்பையா யோகேஸ்வரன் தலைமையில் நடைபெறுகின்றது.
ஈகைச்சுடர் ஏற்றி
குறித்த போட்டியில் முன்னதாக தியாக தீபம் திலீபனுடைய திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்து அகவணக்கம் செலுத்தியதை தொடர்ந்து மலர்வணக்கம் இடம்பெற்று போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகியது.
நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க தலைவர் த.நவநீதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
குறித்த போட்டியில் முதலாம் இடத்தை பெறுபவருக்கு 50000 ரூபா பணப் பரிசும் இரண்டாம் இடத்தை பெறுபவருக்கு 30000 ரூபா பணப் பரிசும் மூன்றாவது இடத்தை பெறுபவருக்கு 20000 ரூபா பண பரிசும் மேலும் தலா 5000 ரூபா பெறுமதியான ஐந்து ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.