தையிட்டி விகாரையை யாழ் மக்களிடமே ஒப்படைக்கத் தயார் - தமிழ் பேசும் தேரரின் கருத்து
யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரை சட்டவிரோதமானது என நிரூபிக்கப்பட்டு பொதுமக்களின் காணியிலேயே விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தினூடாக உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் குறித்த காணியை பொது மக்களுக்கே வழங்க நடவடிக்கை எடுப்பதாக உரிமை பாதுகாப்போம் என்ற அமைப்பைச் சேர்ந்த பொகவந்தலாவ ராகுல தேரர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மீண்டும் இனவாதமும் மதவாதமும் தூண்டி விடப்பட்டுள்ள நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய காலகட்டத்தில் இருப்பதாக இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “திஸ்ஸ விகாரை ஒரு சிறிய விகாரையாக அந்தக் காலத்திலே இருந்திருக்கலாம். இப்பொழுது அந்த விகாரையை பெரிதாக கட்டியிருக்கிறார்கள்.
அந்த விகாரை கட்டப்பட்ட இடத்திற்கு சொந்தக்காரர்கள் இருக்கின்றார்கள் என கூறியிருக்கிறார்கள். எனினும் இதுதொடர்பாக எங்களுக்கு சரிவர தெரியவில்லை. அவர்களோடு நாங்கள் அமர்ந்து பேசத் தயாராக இருக்கின்றோம்.
உங்கள் கையிலே ஒப்படைக்கிறோம்
யாழ். மாவட்டத்திலே தமிழ் பௌத்தர்கள் இருக்கின்றார்கள். நீங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து வாருங்கள். நாங்கள் ஒரு பரிபாலன சபையை அமைத்து அந்த விகாரையை உங்கள் கையிலே ஒப்படைக்கிறோம்.
நாங்களும் வருகின்றோம். அதன்பிறகு அந்த விகாரை பொது மக்கள் கையில் ஒப்படைக்கப்படும்.
தமிழ் பேசுகின்ற அனைத்து உறவுகளும் சென்று அந்த இடத்திலே உங்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொள்ளலாம்” - என்றார்.
