பிரமாண்டமாக விகாரை கட்டப்படும் வரை அரசியல்வாதிகள் உறக்கத்திலிருந்தார்களா - வெளியானது கடும் விசனம்!
யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு தற்போது பெரும் எடுப்பில் போராட்டம் நடத்திவரும் அரசியல்வாதிகள், விகாரைக்கான அடிக்கல் நாட்டும் சந்தர்ப்பத்தில் அசமந்தமாக செயற்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் இரண்டு வருடங்களுக்கு முன்னரே நாடாளுமன்ற உறுப்பிர்களுக்கு தெரியப்படுத்தியிருந்த போதும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்ற விடயத்தை காணி உரிமையாளர்களின் கருத்துக்கள் மூலம் அறியமுடிந்தது.
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தையிட்டி பிரதேசத்தில் இதுவரை காலமும் விடுவிக்கப்படாமல் உள்ள காணிக்குள் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் திகதி விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
கண்டுகொள்ளாத அரசியல்வாதிகள்
சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவினால், இராணுவத்தினர், பௌத்த மதகுருமார் உள்ளிட்ட பலரது பிரசன்னத்துடன் விகாரைக்கான அடிக்கல் நாட்டப்பது.
இந்த நிலையில் இரண்டுவருட கட்டுமானப் பணிகளின் பின்னர் விகாரைக்கு கடந்த 27 ஆம் திகதி கலசம் வைக்கப்பட்டு சம்பிரதாயப்பூர்வமாக பிரதிஷ்டை செய்யப்பட்டது.
எனினும் அடிக்கல் நாட்டப்பட்ட பகுதியை விடுத்து தனியார் ஒருவரின் காணியிலேயே விகாரை கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக தற்போது சுட்டிக்காட்டப்படுகின்றது.
இந்த நிலையில், காணி உரிமையாளர்களால் கவனயீர்ப்பு போராட்டம் கடந்த புதன் கிழமை ஆயத்தப்படுத்தப்பட்ட நிலையில், அதற்கு தமிழ் அரசியற் கட்சிகளும் ஆதரவு வழங்குவதாக தெரிவித்து, போராட்டத்தை மூன்று நாட்களுக்கு நீடித்தனர்.
இதேவேளை, இந்த விகாரைக் கட்டுமானங்கள் தொடர்பில் தாம் கடந்த 2021 ஆம் ஆண்டே அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்தியிருந்ததாக காணி உரிமையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அத்துடன் மீளக்குடிமர முடியாதுள்ளமை தொடர்பிலும் காணி அபகரிப்பு தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு காணி உரிமையாளர்களால் அனுப்பப்பட்ட கடிதம் ஒன்றும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
இருப்பினும், தற்போது தான் பெரும் எடுப்பில் அரசியல்வாதிகள் புதிய போராட்டத்தை முன்னெடுப்பதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குறித்த விகாரை அமைப்பதற்கு 2021 ஆண்டு இடம்பெற்ற வலிகாமம் வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டதுடன், நிரந்தக் கட்டடம் அமைக்க இடைக்காலத் தடை விதித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
எனினும் தற்போது விகாரை கட்டி முடிக்கப்பட்டு முழுமைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் குறித்த விகாரை சட்டவிரோதமானது என்பதை தெல்லிப்பழை பிரதேச செயலர் சண்முகராஜா சிவஸ்ரீ, யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் உறுதிப்படுத்தினார்.