திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்! கஸ்ஸப தேரர் உட்பட 10 பேரின் விளக்கமறியல் நீடிப்பு
புதிய இணைப்பு
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு பிக்குகள் உட்பட 10 சந்தேகநபர்களுக்கு விளக்கமறியலானது நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கைது செய்யப்பட்டவர்களுக்கு பெப்ரவரி 2வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு பிக்குகள் உட்பட 10 சந்தேகநபர்களும் தற்போது நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 சந்தேகநபர்களையும் இன்று (28) வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் கடந்த 19 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார்.
சந்தேகநபர்களுக்கு எதிராகக் கரையோரப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெறுவதற்குச் சட்டமா அதிபர் மற்றும் திருகோணமலை துறைமுகப் பொலிஸார் மறுப்புத் தெரிவித்ததையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நீதிமன்றில் விசாரணை
திருகோணமலை நகர கரையோரப் பாதுகாப்பு வலயத்தினுள் அனுமதியின்றி கூடாரமொன்றை அமைத்து புத்தர் சிலையொன்றை ஸ்தாபித்ததாக, கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவத் திணைக்களம் செய்த முறைப்பாடு தொடர்பான வழக்கு கடந்த ஜனவரி 14 ஆம் திகதி திருகோணமலை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது அவ்வழக்கில் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டிருந்த 11 பேரில் 09 பேர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.
இவர்களில் திருகோணமலை கோட்டை வீதியிலுள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் விகாராதிபதி திருகோணமலை கல்யாணவம்ச திஸ்ஸ தேரர், பலங்கொட கஸ்ஸப தேரர், திருகோணமலை சுகிதவம்ச திஸ்ஸ தேரர் மற்றும் நந்த தேரர் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.
உண்ணாவிரதப் போராட்டம்
இதன்போது திருகோணமலை பொலிஸார், சந்தேகநபர்களுக்கு எதிராகக் கரையோரப் பாதுகாப்புச் சட்டத்தை மீறியமை மற்றும் சட்டவிரோதக் கட்டுமானம் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் விடயங்களை முன்வைத்தனர்.

சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதவான் சந்தேகநபர்களை இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போது பலங்கொட கஸ்ஸப தேரர் சிறைச்சாலைக்குள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்ததுடன், பின்னர் அது தற்காலிகமாகக் கைவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |