மாவீரர் தினத்திற்கு தயாராகும் துயிலும் இல்லங்கள்
தமிழ் மக்களது சுபீட்சமான வாழ்வுக்காக தங்களது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்குகின்ற தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் இம்முறையும் நவம்பர் 27ஆம் திகதி தமிழர் தாயகம் எங்கும் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட இருக்கின்றது
அந்த வகையிலே மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்வதற்காக தமிழர் தாயக பகுதிகளில் மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன
மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்ல சிரமதானப் பணி
இந்தநிலையில் நேற்று ( 01 /11 / 2026) மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்ல செயற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சாமிநாதன் தலைமையில் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்ல சிரமதானப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதில் செயற்பாட்டுக்குழு உறுப்பினர்கள், மாவீரர் பெற்றோர்கள், உரித்துடையோர், நலன் விரும்பிகள், முன்னாள் போராளிகள் என பலரும் கலந்துக் கொண்டனர்.
துணுக்காய் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்ல சிரமதானப் பணி
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்திலும் நேற்றைய தினம் (01) ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு சிரமதானப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்கள் முன்னாள் போராளிகள் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் மற்றும் பொது மக்கள் இணைந்து குறித்த சிரமதான பணிகளை மேற்கொண்டனர்.

துயிலும் இல்ல வளாகத்தில் இராணுவம் ஆக்கிரமித்து நிலை கொண்டிருப்பதால் அதன் அருகாமையில் உள்ள காணியில் நினைவேந்தல் நிகழ்வுகள் கடந்த வருடங்களை போன்று இம்முறையும் நவம்பர் 27 ஆம் திகதி 6.05 க்கு மணி ஒலி எழுப்பப்பட்டு 6.06 க்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு 06.07 க்கு அனைத்து மா வீரர்களுக்கும் ஈகைச்சுடர் ஏற்றி வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
எனவே அனைவரையும் குறித்த நிகழ்விலும் அதற்கு முன்னரான ஏற்ப்பாட்டு பணிகளிலும் கலந்து கொள்ளுமாறு பணிக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |







