தெருத் தெருவாக பணம் வசூலிக்கும் பிள்ளையான் தரப்பு
பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் மக்களிடமிருந்து பணம் சேகரிப்பதாக ஆதாரங்களுடன் தகவல் வெளியாகியுள்ளது.
இக்கட்சியினர் மே தின நிகழ்வு நடத்துவதற்காகவே தெருத் தெருவாகச் சென்று மக்களிடமிருந்து பணம் சேகரிக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரிய சந்தேகம்
கிழக்கை மீட்கப் போகிறோம் என ஆரம்பித்த பிள்ளையானின் அரசியல் பயணம், தற்போது கிழக்கை ஏப்பமிடும் அளவிற்கு சென்றுள்ளமையானது மக்கள் மத்தியில் வேடிக்கையாக பார்க்கப்படும் நிலையில், தற்போது தெருத்தெருவாக சென்று மக்களிடமே பணம் சேகரிப்பது மற்றுமொரு கேலிக்கூத்தாகவே பார்க்கப்படுகிறது.
கடந்த தேர்தலின் போது, எந்தவித தேர்தல் பிரசாரமுமில்லாமல், சிறையில் இருந்தவாறே மக்களின் மனங்களை வென்று அமோக வெற்றியீட்டியதாக மார் தட்டிய பிள்ளையானின் செல்வாக்கு தற்போது சரிவை நோக்கி செல்லும் நிலையில், அவர்களின் இவ்வாறான நடவடிக்கை மூலம் யாரை ஏமாற்ற முயல்கின்றனர் என்ற பாரிய சந்தேகம் தற்போது மக்கள் மத்தியில் எழுத்துள்ளது.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டதாக தொடர்ச்சியாக குற்றம் சாட்டப்பட்டு வரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, தேர்தலில் வெற்றி பெற்றதும் தமிழ் மக்கள் மனங்களை வென்று விட்டதாக எண்ணி கட்டிய மனக் கோட்டை தற்போது அதே மக்களாலேயே மெல்ல மெல்ல சிதைக்கப்படுவதையும் கண்கூடாக காணமுடிகின்றது.
இவ்வாறன நிலையில், கடந்த சில வாரத்துக்கு முன்பதாக, தந்தையின் பெயரில் பல ஏக்கர் காணிகள் மற்றும் ஏனைய குடும்ப உறவினர்களுக்கு பல ஏக்கர் காணிகள் என மட்டக்களப்பில் பல காணிகளை சட்டவிரோதமாக அபகரித்து ஏப்பமிட்டுள்ளதாக பிள்ளையான் மீது பல விமர்சனங்கள் எழுத்துள்ளன.
இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் மக்கள் மனங்களில் பல அதிருப்திகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், மே தின நிகழ்வுகளுக்காக மீண்டும் மக்களிடமே பணம் சேகரிக்கும் இவர்களின் செயற்பாடுகள் மேலும் பல சந்தேகங்களை மக்கள் மனங்களில் ஏற்படுத்தியுள்ளது.
அது மட்டுமன்றி இந்த நடவடிக்கை யாரை ஏமாற்ற நடக்கும் வேலைத்திட்டம் என்ற சந்தேகமும் தற்போது எழுத்துள்ளது.
