தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் எவராகவிருந்தாலும் ஒழுக்காற்று நடவடிக்கை - மாவை அதிரடி முடிவு(காணொளி)
கட்சிகளுக்குள் பிளவு ஏற்படுத்தும் முகமாக செயற்பட்ட தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இன்று (2) அவரது இல்லத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கொண்டவாறு தெரிவித்தார்.
மேலும் எதிர்வரும் 11,12ம் திகதிகளில் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவித்தார்.
கட்சி வேண்டுகோள்
மேலும் கருத்து தெரிவிக்கையில்,
''இலங்கை தமிழரசு கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒரு அங்கத்துவ கட்சியாக இருந்துகொண்டு எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் ஒரு புதிய அணுகுமுறையை சிபாரிசு செய்திருக்கின்றார்கள்.
அதாவது இந்த தேர்தல் வட்டார அடிப்படையிலும் விகிதாசார அடிப்படையிலும் பிரதிநிதிகளை தெரிவு செய்கின்ற அந்த முறையின் மூலமாக ஒரு புதிய அணுகல் முறையினை நாங்கள் பரீட்சித்து பார்க்க வேண்டும்.
அதில் வெற்றி பெற வேண்டும் என்று எங்களுடைய கட்சி வேண்டுகோள் விடுத்திருந்தது. இலங்கை தமிழரசுகட்சியினுடைய மத்திய குழு குறித்த சிபாரிசை செய்திருந்தது.
புதிய அணுகுமுறை
அந்த சிபாரிசின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பிலே அங்கம் வகிக்கின்ற கட்சிகள் ஒவ்வொருவரும் தனித்தனியாக தேர்தலிலே போட்டி இடுவதன் மூலம் வட்டார அடிப்படையிலே வருகின்ற கட்சிகளும் அதைவிட விகிதாசார அடிப்படையில் ஏனைய கட்சிகளும் பெறுகின்ற எஞ்சிய வாக்குகளால் வருகின்ற அந்த பிரதிநிதித்துவத்தையும் நாங்கள் எல்லோரும் ஒன்றாகப் பெறலாம் எனபதே எங்களுடைய நோக்கமாகும்.
எல்லாரும் ஒன்றாக எங்களுடைய வடகிழக்கில், நகர சபை என்றாலும் பிரதேச சபையாக என்றாலும் ஒரு பெரும்பான்மையினை நாங்கள் பெற்று ஆட்சி அமைக்கலாம் என்று ஒரு புதிய அணுகுமுறையை செயல்படுத்தி இந்த முறை தேர்தலில் களமிறங்குவோம் என கலந்து பேசினோம்.
அந்த தீர்மானத்தை இறுதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பிலே அங்கம் வைக்கின்ற கட்சிகள் அதில் அதிகம் விருப்பம் இல்லாமல் இருந்தார்கள்.
முரண்பட்ட கருத்துக்கள்
நாங்கள் ஒவ்வொருவருக்கொருவர் முரண்பட்டுக் கொள்ளாமல் தேர்தலில் பெறுகின்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் வடகிழக்கில் ஒன்றுபட்டு நாங்கள் ஆட்சியினை அமைப்போம் என கூறினோம்.
அந்த காரணங்களுக்காக எங்கள் மத்தியில் முரண்பாடுகள், பிளவுகள் ஏற்படாமல் ஒற்றுமையாக நாங்கள் மீண்டும் கூடி வட கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைப்பதற்கு ஒரு அணுகல் முறையை கடைப்பிடிக்க வேண்டும் என கோரி இருக்கின்றோம்.
கட்சியின் மூத்த உறுப்பினர்கள் ஏனைய கட்சிகளை விமர்சித்தல் மற்றும் முரண்பட்ட கருத்துக்களை வெளியிடுதல் போன்ற செயற்பாடுகள் அண்மைய நாட்களில் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் தமிழரசு கட்சியின் தலைவர் என்ற ரீதியில் நான் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சுமத்துகின்றார்கள்.
ஒழுக்காற்று நடவடிக்கை
இன்று காலையிலும் எனக்கு பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் அறிக்கை மற்றும் தவராசாவின் அறிக்கையின் மூலம் மிகவும் அதிருப்தி அடைந்த மக்களின் கருதுக்கிணங்க அவர்களுடைய பிரதிநிதிகள் மற்றும் கட்சி பிரதிநிதிகள் என்னிடம்விடுத்த கோரிக்கையை மையப்படுத்தி இந்த மாதம் 11, 12ல் மத்திய செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டு கட்சி பிளவுபடுத்தக்கூடிய வார்த்தை பிரயோகங்களை பிரயோகித்தவர்கள் மற்றும் பிரசார மேடைகளில் ஏனைய கட்சிகளை விமர்சித்தவர்கள் எந்த பொறுப்பில் இருந்தாலும் அவர்களுக்குரிய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானித்திருக்கின்றேன்.
எனவே எதிர்வரும் மத்திய செயற்குழு கூட்டத்தில் ஏனைய கட்சிகளை விமர்சித்தவர்கள் தமது கட்சிகளை பிளவுபடுத்தக்கூடியவாறு செயல்பட்டவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க உள்ளேன்.
ஆனபடியினால் எங்களுடைய மக்களுடைய ஒற்றுமையான அரசியல் தீர்மானத்தை முன்வைத்து அது தொடர்பான பேச்சுவார்த்தையை எதிர்காலத்தில் நடத்தி இனப் பிரச்சினைக்கான தீர்வை காண்பதற்கு தீர்மானித்துள்ளோம்.
அதற்கு மாறாக செயற்படும் இவ்வாறான சக்திகள் கட்சியில் இருந்தால் என்ன வெளியில் இருந்தால் என்ன இவ்வாறான செயல்களுக்கு இடமளிக்கக்கூடாது என்பதற்காக மிக பொருத்தமான வகையில் தமிழரசு கட்சியினுடைய மத்திய செயற்குழு இந்த விடயங்களை ஆராய்ந்து அதற்கு பொருத்தமான வகையில் ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களாக அவர்கள் கருதப்பட்டதால், ஒழுங்கு விதியின் அடிப்படையில் அவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)