கால்வாயில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு
பெற்றோர்களுடன் சுற்றுலா சென்ற சிறுவன் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் பொத்தானையில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ரகுமானியா வீதி பாலை நகர் தியாவட்டவானைச் சேர்ந்த றிபாஸ் முகமட் ஆசிக் வயது (12) என்ற 7ஆம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று சனிக்கிழமையன்று (24) பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பொத்தானை வயல் பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
மதிய உணவினை உட்கொள்வதற்காக சிறுவனை தேடியபோது அருகில் உள்ள நீர் வடிந்தோடும் கால்வாயில் விழுந்து கிடந்ததை கண்டு அவரை மீட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். பின் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணைகளை கோறளைப்பற்று பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி வ. ரமேஸ் ஆனந்தன் மேற்கொண்டிருந்தார்.
நீரில் மூழ்கியதால் மூச்சு திணறி உயிரிழந்துள்ளதாகவும், உடற் கூற்றாய்வின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் கையளிக்குமாறும் மரணவிசாரணை அதிகாரி பொலிசாரை பணித்திருந்தார்.
தற்போது சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.



