மாவீரர்களின் கனவுகளை சுமந்து ஒன்று கூடியது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு..!
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது தவணைக் காலத்திற்கான 9வது அரசவை அமர்வு சமீபத்தில் அமெரிக்கா நியுயோக் நகரில் நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நினைவேந்தல் நடைபெற்று, அதனை அடுத்து வருகின்ற வார இறுதி நாட்களிலும் அதே போல தமிழீழ மக்களின் விடிவிற்காக தங்கள் உயிர்களை ஆகுதியாக்கிய புனிதர்களை நினைவுகூருகின்ற நாளினை அடுத்து வருகின்ற வார இறுதி நாட்களிலும் அனைத்து நாடுகளிலும் உள்ள அரசவை உறுப்பினர்கள் ஒன்றாக அரசவையை கூட்டி உறுதியேற்புடன் தாயகம் நோக்கிய பணிகளை முன்னெடுப்பது வழமை.
அதற்கமைய வலிசுமந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்தினை மனதிலிருத்தி கூடிய அரசவையின் தொடக்க நாள் நிகழ்வுகள் நியூயோர்க் சட்டத்தரணிகள் சங்க மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.
முதல் நாள் அமர்வு
இதில் இந்து சமுத்திரத்தில் வளர்ந்துவரும் சீனாவின் ஆதிக்கம், இறைமையும், சுதந்திரமும் கொண்ட தமிழீழத்தை அமைப்பதற்கான உலகத்தமிழர்களின் வகிபாகம் ஆகியன கருப் பொருட்களாக எடுக்கப்பட்டதோடு, கட்டமைப்பு ரீதியிலான இனப்படுகொலையை தடுக்கும் வழிமுறைகள் தொடர்பாகவும் பேசப்பட்டன.
முதல் நாள் அமர்வில், தோழமை உணர்வுடன் பங்குபற்றிய ஆர்மேனிய முன்னாள் ஐ. நா சபைப் பிரதிநிதியும், தற்போதைய ஆர்மேனிய அமெரிக்க அமைப்பின் தலைவரான வன் கிரிகோரியன் அவர்கள் ஆர்மேனிய மக்களின் மீதான இன அழிப்பிற்கும், முள்ளிவாய்க்கால் தமிழ் இனவழிப்பிற்கும் இடையே இருந்த ஒற்றுமைகளை சுட்டிக்காட்டிப் பேசியிருந்தார்.
இதன்போது, ஒன்ராரியோ மாகாணசபை உறுப்பினர் லோகன் கணபதி அவர்கள் பொதுவாக்கெடுப்பு ஒன்றின் மூலம்தான் ஈழத் தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வுகாணலாம் எனக் தெரிவித்துள்ளார்.
மேலும், தாயகத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் இணையவழி மூலம் பங்குபற்றி உரையாற்றியதுடன், மாவை சேனாதிராஜா அவர்கள் எழுத்துமூல வாழ்த்துக்களையும் தாயகத்தில் வேகமாக நடைபெற்று வரும் கட்டமைப்பு ரீதியிலான இனப்படுகொலைகள் பற்றியும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொறுப்புக்கூறல்
இதனை தொடர்ந்து, இத்தாலியில் இருந்து “ஐரோப்பிய புதிய தலைமுறை ஒன்றியம்”ஐ சேர்ந்த அருகன் அவர்கள் தங்களது அரசியல் கட்சிக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்கு நன்றியைத் தெரிவித்து “நன்றிநவிலல்” பட்டயத்தை பிரதமருக்கு வழங்கியுள்ளார்.
பிரான்ஸ்சில் இருந்து சட்டவாளர் திரு. தோமஸ் கஸ்டஜோன் அவர்கள் பிரான்ஸ்சில் ஈழத்தமிழர் நிலை குறித்தும், இனப் படுகொலை தொடர்பான பொறுப்புக்கூறல் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழ் ஆராய்ச்சி மையத்தில் இருந்து திரு. அருண்குமார் அவர்கள் பரிணமித்துவரும் பல்மைய உலக ஒழுங்கில் தமிழர்களுடைய அரசியல் பெருவிருப்பிற்கு அங்கீகாரம் வழங்குவது அவசியம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக வணிக வலைபின்னல் தலைவர் சதாசிவம் காணொளி மூலம் உரையாற்றியதோடு, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க தலைவர் அனன் பொன்னம்பலம், தமிழ் அமெரிக்க ஐக்கிய அரசியல் நடவடிக்கைக் குழு தலைவர் மீனா இழஞ்செழியன், சங்கம் அமைப்பு சுஜாந்தி, உலகத் தமிழர் அமைப்பு ரவிக்குமார் ஆகியோர் தோழமை உணர்வுடன் உரையாற்றியுள்ளனர்.
மேலும், கனடா நாடாளுமன்ற உறுப்பினர் சாண் சென், கனடாவின் எதிர்க் கட்சித் தலைவர் பியர் மற்றும் மலேசியாவில் இருந்து பேராசிரியர் ராமசாமி ஆகியோர் காணொளி மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இரண்டாம் நாள் அமர்வு
இரண்டாம் நாள் அமர்வு அவைத்தலைவர், பிரதமர் ஆகியோரின் உரையுடன் ஆரம்பித்து இருந்தது.
பிரதமர் தனது உரையில், இலங்கைத் தீவில் 1600 கிலோ மீற்றர் நீளமான கரையோரப் பகுதிகளில் 1050 கிலோ மீற்றர் கரையோரப் பகுதிகள் ஈழத்தமிழர் தாயகப் பிரதேசத்திற்கு உரியதாக உள்ளதோடு, இலங்கைத் தீவில் மொத்தக் கரையோரப் பகுதிகளில் 66 வீதத்திற்கு உரித்துடையவர்கள் ஈழத் தமிழர்களாக இருந்த போதிலும் இலங்கைத் தீவு குறித்தோ, இந்தியப் பெருங்கடல் குறித்தோ எடுக்கப்பட்ட புவிசார் அரசியல்களில் ஈழத் தமிழர்கள் பங்காளிகளாக இல்லாத நிலையை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவர், இப் புவிசார் அரசியலில் எமக்குள்ள பங்கிற்காக நாம் போராட வேண்டும் எனவும், தமிழர் தாயகத்தை அடைய கடலில் ஈழத்தமிழர்களினது இறைமையை தமிழீழ விடுதலைப் புலிகளின் இடர் கால தன்னாட்சி அதிகார சபை வரைபு குறிப்பிட்டிருந்தமையையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மேலவையும் அரசவையும் இணைந்த உரையாடல் ஆரம்பித்திருந்தது.
அதில் செனட்டர் ராஜரட்னம் அவர்கள் உலகத் தமிழர்கள் ஒன்றுபடுவதற்கான வழிவகைகள் தொடர்பாகவும், வைத்தியக் கலாநிதி ஜெயலிங்கம் அவர்கள் தமிழ்த் தேசியப் பிரச்சனையும், சிறிலங்கா அரசாங்கத்தின் மீது இந்தியாவின் செல்வாக்கு குறைந்து வருவதும், தமிழர் பகுதிகளில் சீனா எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் கருத்து வெளியிட்டிருந்தார்.
சிங்கள பௌத்த மயமாக்கல்
செனட்டர் உஷா சிறீஸ்கந்தராசா தமிழர் தாயகத்தில் இடம்பெற்றுவரும் சிங்கள பௌத்த மயமாக்கல் நடவடிக்கை ஈழத்தமிழர்களின் பாரம்பரியத்தையும், அடையாளத்தையும் அழிக்கும் நோக்கத்துடன் இடம்பெற்று வருவதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை தொடர்ந்து, செனட்டர் சத்யா சிவராமன் இன்றைய சர்வதேச அரசியலை ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் உள்ள போட்டியாக வெறுமனே கருத முடியாது என தெரிவித்துள்ளார்.
மேலவை உறுப்பினர்களின் பேச்சுக்களைத் தொடர்ந்து நடைபெற்ற உரையாடல்களில் தமிழ்த்தேசியப் பிரச்சனையை BRICS அமைப்பிற்கும், சீனாவிற்கும் தெரியப்படுத்துவது தொடர்பான கருத்துக்கள் தமிழக சட்டசபையில் பொது வாக்கெடுப்பு தொடர்பாக மீண்டும் ஒரு தீர்மானம் கொண்டுவரப்படுவது பற்றி பேசப்பட்டுள்ளன.
மேலும், அமைச்சர்கள் தங்களது 6 மாதகாலம் தொடர்பான அறிக்கைகள் சமர்ப்பித்ததோடு, அதுதொடர்பான விவாதங்களும் இடம்பெற்றது.
அத்துடன், உறுப்பினர் நேரத்தில் நடைபெற்ற உரையாடல்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பேணிவரும் ஜனநாயக விழுமியங்களை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருந்தன.
இறுதியாக, “நம்புங்கள் தமிழீழம்” எனும் பாடலுடன் அரசவை அமர்வு நிறைவு பெற்றது.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)