பிரித்தானியா சென்று திரும்பி வராத இலங்கை விளையாட்டு வீரர்கள்! பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு
2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள சென்ற பின்னர் நாடு திரும்பத் தவறியதாகக் கூறப்படும் பத்து இலங்கை விளையாட்டு வீரர்களுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவானது நேற்று(17) கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகமவினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட விளையாட்டு வீரர்களால் அரசாங்கத்திற்கு கிட்டத்தட்ட 50 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி, சம்பவத்தில் தொடர்புடைய பத்து சந்தேக நபர்களுக்கு இன்டர்போல் சிவப்பு அறிவிப்புகளை வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாக விளையாட்டு குற்றங்களைத் தடுப்பதற்கான சிறப்பு புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் 2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிக்குச் சென்ற பிறகு, போட்டிகளில் பங்கேற்கத் தவறி இலங்கைக்குத் திரும்பாததாகக் கூறப்படும் பத்து விளையாட்டு வீரர்கள் குறித்து விசாரணைகள் நடந்து வருவதாக விளையாட்டு குற்றங்கள் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஊழல் குற்றம்
விளையாட்டு பணிப்பாளர் நாயகம் அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து இது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
அத்துடன், விளையாட்டுக் குற்றங்கள் தடுப்புச் சட்டத்தின் 24 ஆம் எண் பிரிவுகளின் கீழ், விளையாட்டுக்களில் பங்கேற்கத் தவறிய ஊழல் குற்றம் தொடர்பாக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பின்வரும் விளையாட்டு வீரர்களுக்கு பயணத் தடைக்கு விதிக்கப்பட்டுள்ளது.
- அசேல டி சில்வா
- சமிலா திலானி
- எஸ். சதுரங்கா
- ஒய். நிக்லஸ்
- அஷேன் ரஷ்மிகா
- எஸ். மலிந்தா
- ஸ்ரியந்திகா பெர்னாண்டோ
- சஞ்சீவ ராஜகருணா
- ஜீவந்த விமுக்தி குமார
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
