திருச்சி சிறப்பு முகாமில் நடப்பது என்ன..! உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈழத்தமிழர்
திருச்சி சிறப்பு முகாமில் ஈழத் தமிழரான கந்தசாமி கிருஸ்ணகுமார் என்பவர் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
சிறப்பு முகாமின் நுழைவாயிலுக்கு அருகில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த 22 ஆம் திகதி அவர் இந்த உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதுடன், இன்று 5ஆவது நாளாக தொடர்ந்தும் தண்ணீர் கூட பருகாமல் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோரிக்கைகள்
- அடிப்படை உரிமையான பேச்சு தொடர்பு சாதனமான கைபேசியை திரும்ப வழங்க வேண்டும்,
- உறவினர் பார்க்க வரும் போது கொரோனாவுக்கு முன்னர் இருந்த நடைமுறை போல் அனுமதி வழங்க வேண்டும்,
- சிறப்பு முகாமில் 150 பேர் இருப்பதுடன் முகாமில் முதல் உதவி சிகிச்சைக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்,
- வழக்குகள் முடிந்த நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்கும் தினத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும்,
- பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளவர்களுக்கு உரிய காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்,
- சட்டத்தரணிகளுடனான நேர்காணலுக்கு அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கிருஸ்ணகுமார் இந்த உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
தொடர்ந்து 5 நாட்களாக உணவை ஒறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதன் காரணமாக கிருஸ்ண குமாரின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாடித் துடிப்பு குறைந்துள்ளதாக சிறப்பு முகாமில் இருக்கும் ஒருவர் கூறியுள்ளார்.
அதிகாரிகள் எவரும் வந்த பார்க்கவில்லை என்பதுடன் எதனையும் கேட்கவில்லை. தம்மால் எதுவும் செய்ய முடியாது என அதிகாரிகள் கூறுகின்றனர். அதிகாரிகள் தொலைபேசிகளை பறித்துள்ளதால், வெளியில் தகவல்களை வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி
திருச்சி சிறப்பு முகாமில் பதற்றம்- ஈழ அகதிகள் சிலர் வயிற்றைக் கத்தியால் கீறி தற்கொலைக்கு முயற்சி!





