திருகோணமலையில் இளைஞனின் உயிரை காவு வாங்கிய மோட்டார் சைக்கிள் விபத்து
திருகோணமலை - தம்பலகாமம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சீமெந்து குழைக்கும் கனரக வாகனத்துடன், குறித்த இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிளில் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (29.08.2026) மாலை இடம் பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த இளைஞன் (24) தம்பலாகாமம், பட்டிமேடு பகுதியை சேர்ந்தவர் எனவும் தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில் புரிபவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
குறித்த விபத்து தொடர்பில் தெரியவருவதாவது, மோட்டார் சைக்கிள் மூலம் திருகோணமலை நோக்கி சென்ற இளைஞனே இவ்வாறு கனரக வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளக்கியுள்ளார்.

இந்த விபத்து சம்பவம் திருகோணமலை - கண்டி பிரதான வீதியில் தம்பலகாம பிரதேசத்துக்குட்பட்ட ஜெயபுர என்னும் இடத்தில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது கந்தளாய் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |