காசாவை நிர்வகிக்க ரஷ்யாவின் உதவியை நாடும் ட்ரம்ப்...! புடினுக்கு அழைப்பு
காசாவின் மறுசீரமைப்பு மற்றும் நிர்வாகத்தைக் கவனிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உருவாக்கியுள்ள அமைதி வாரியத்தில் இணையுமாறு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை கிரெம்ளின் மாளிகை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தின் அடுத்தகட்டமாக, அந்தப் பிராந்தியத்தை நிர்வகிக்க சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பை ட்ரம்ப் நாடியுள்ளார்.
அமைதி வாரியம்
இதன் ஒரு பகுதியாக, புடினை இந்த அமைதி வாரியத்தில் இணையுமாறு அவர் அழைத்துள்ளார்.
இந்த அழைப்பு குறித்து கருத்து கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கருத்து வெளியிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்துள்ள அவர், “புடினுக்கு அழைப்பு வந்துள்ளது உண்மைதான். காசாவில் அமைதியை நிலைநாட்ட ரஷ்யா எப்போதும் தயாராகவே உள்ளது.
எனினும், இந்த வாரியத்தின் செயல்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான உதவி
காசாவின் சிவில் நிர்வாகத்தை வழிநடத்துவது, மனிதாபிமான உதவிகளை உறுதி செய்வது மற்றும் ஹமாஸ் அமைப்பை நிராயுதபாணியாக்கும் பணிகளை மேற்பார்வையிடுவது ஆகியவையே இந்த வாரியத்தின் முக்கிய நோக்கங்களாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் ஏற்கனவே எகிப்து, துருக்கி மற்றும் கத்தார் போன்ற நாடுகள் இடம்பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், உக்ரைன் போர் காரணமாக அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே கடும் மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்த ட்ரம்ப் ரஷ்யாவின் உதவியை நாடியிருப்பது சர்வதேச அரசியலில் மிக முக்கியமான திருப்பமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ரஷ்யாவை இந்த வாரியத்தில் இணைப்பது குறித்து இஸ்ரேல் தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வமான கருத்துக்கள் எதுவும் வெளியாகவில்லை.
இருப்பினும், ஹமாஸுடன் நல்லுறவைக் கொண்டுள்ள ரஷ்யா இந்த வாரியத்தில் இருப்பது பயனுள்ளதாக இருக்கும் என அமெரிக்கா கருதுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |