அமெரிக்காவை உலுக்கிய துப்பாக்கிசூடு - ட்ரம்ப் வெளியிட்ட தகவல்
டெக்சாஸ் துப்பாக்கிசூடு
அமெரிக்கா - டெக்சாஸ் துப்பாக்கிசூட்டில் பலியானவர்களுக்கு தங்களை தற்காத்துக்கொள்ள எந்த வழியும் இருக்கவில்லை. துப்பாக்கியுடன் இருக்கும் கெட்ட மனிதனை நிறுத்த ஒரே வழி, ஒரு நல்ல மனிதனின் கையில் துப்பாக்கியை கொடுப்பதுதான் என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தீர்வு கூறியுள்ளார்.
டெக்சாஸ் மாகாணம் யுவால்டி நகரில் உள்ள ராப் ஆரம்ப பாடசாலைக்குள் கடந்த மே 25 ஆம் திகதி துப்பாக்கியுடன் நுழைந்த 18 வயது இளைஞன் பாடசாலை குழந்தைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 19 குழந்தைகள், 2 ஆசிரியைகள் உட்பட 21 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாகி கலாசாரத்திற்கு எதிராக கடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்தக்கோரி பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இதையடுத்து பல்வேறு இடங்களில் போராட்டங்களும் வெடித்துள்ளன.
ட்ரம்பின் கருத்து
இந்த நிலையில் கருத்து வெளியிட்டுள்ள ட்ரம்ப், ஒரு பாடசாலைக்கு ஒரே நுழைவுப் பாதை மட்டுமே இருக்கும்படி செய்ய வேண்டும்.
ஒவ்வொரு பாடசாலையிலும் வலுவான தடுப்பு அமைப்பு மற்றும் உலோகங்களை கண்டறியும் கருவிகள் போன்றவையும் அமைக்க வேண்டும்.
உக்ரைனுக்கு அனுப்ப அமெரிக்கா 40 பில்லியன் டொலர் கொடுக்க முடியும் என்றால் இதையும் எம்மால் செய்ய முடியும் எனக் கூறியுள்ளார்.

