நிலநடுக்கப் பகுதிக்கு துருக்கி அதிபர் நேரடி விஜயம் - பன்னீராயிரத்தை அண்மிக்கும் உயிர்ப்பலி
இரண்டாம் இணைப்பு
துருக்கி மற்றும் சிரியாவில் உணரப்பட்ட நிலநடுக்கங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக விஜயம் செய்து பாதிக்கப்பட்ட மக்களை துருக்கி அதிபர் தையீப் ஏர்துவான் சந்தித்துள்ளார்.
துருக்கியில் 8 ஆயிரத்து 500 மேற்பட்டவர்களும், சிரியாவில் 2 ஆயிரத்து 700 இற்கும் மேற்பட்டவர்களும் இதுவரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் குறிப்பிடுகின்றன.
துருக்கியில் நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட 10 மாகாணங்களில் மூன்று மாதங்களுக்கு அவசர நிலைமையை பிரகடனம் செய்துள்ள துருக்கி அதிபர் தையீப் ஏர்துவான் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இன்று நேரடியாக விஜயம் செய்துள்ளார்.
நிலநடுக்கத்தை அடுத்து உடனடியாக பதில் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தாமதம் காட்டப்பட்டமை குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், பதில் நடவடிக்கையின் ஆரம்பத்தில் பிரச்சினை இருந்ததை துருக்கி அதிபர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
எனினும் தற்போது நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் துருக்கி மக்கள் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
வீதிகள் மற்றும் விமான நிலையங்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள போதிலும் அனைத்தும் தற்போது மேம்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
எந்தவொருவரும் வீதிகளில் விடப்பட மாட்டார்கள் எனவும் அனைவருக்கும் புதிய வீடுகள் நிர்மாணித்துகொடுக்கப்படும் எனவும் துருக்கி அதிபர் மேலும் கூறியுள்ளார்.
முதலாம் இணைப்பு
துருக்கி - சிரிய எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்பில் துன்பியல் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
கட்டட இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ள பலரை மீட்கும் பணிகள் கடும் சவால்களுக்கு மத்தியில் இடம்பெற்று வரும் நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
மீட்பு பணிகள்
தெற்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியாவில் கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட இரண்டு பெரிய நிலநடுக்கங்களுக்குப் பின்னர் மீட்புப் படையினர் உயிர் பிழைத்தவர்களைத் தீவிரமாகத் தேடி மீட்டு வருகின்றனர்.
இந்த நிலநடுக்கத்தால் துருக்கியில் அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. அங்கு 8 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் ( 8,754) உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிரியாவில் 2 ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் அங்கு மேலும் உயிரிழப்புக்கள் பதிவாகியிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
அதிகாலையில் இந்த துன்பியல் சம்பவம் இடம்பெற்றமையால், கட்டடங்களுக்குள் இருந்த அதிகளவானவர்கள் உயிரிழப்பதற்கு காரணமாகியுள்ளது.
நிலநடுக்கத்தால் சிரியாவின் வடபகுதிக்கு செல்லும் வீதிகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதிலும் கடும் சவால் நிலை நிலவுவதாக, சிரியாவிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச சிறுவர் நிதிய அவசரநிலை ஆலோசகர் மெலிண்டா யங் (Melinda Young) கூறியுள்ளார்.
துருக்கி - சிரிய எல்லையைக் கடக்கும் இடத்தில், துருக்கியில் இருந்து உதவிப் பொருட்களை அனுப்புவது மிகவும் கடினமாக உள்ளதாக அவர் கூறுகின்றார்.
இவ்வாறான சூழலில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள போதிலும், காலம் தாமதத்தாலும் சில உயிரிழப்புக்கள் பதிவாகலாம் என அஞ்சப்படுகின்றது.
உறைபனி - குளிர் இரவிற்கு மத்தியிலும் தேடுதல்
உறைபனி-குளிர் இரவிற்கு மத்தியிலும் தேடுதல் முயற்சிகள் தொடர்கின்ற போதிலும் இடிபாடுகளுக்குள் உயிருடன் இருப்பவர்களை மீட்பதற்கான காலமும் கடந்து வருகின்றது.
பரந்த அளவில் மீட்புப் பணிகள் இடம்பெறுகின்ற போதிலும், தமது உறவுகளை காணாததால் சிலர் அதிகாரிகள் மீது கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருவதுடன், மீட்பு பணிகள் மந்தமாக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
சர்வதேச உதவிகளும் சிரியாவை நோக்கி செல்கின்றமை ஒருபுறம் ஆறுதல் அளித்தாலும், சேதமடைந்த வீதிகளால் நிவாரணங்கள் தாமதமாவதாக சுட்டிக்காட்ட்படுகின்றது.
