யாழில் பரிசோதனைக்கு சென்ற பொதுச்சுகாதார பரிசோதகர்கள் : தொழிற்சாலைக்குள் வைத்து பூட்டிய உரிமையாளர்கள்
யாழ்ப்பாணம் (Jaffna) - தெல்லிப்பளையில் அனுமதியற்ற உணவுப்பொருட்கள் தயாரிக்கும் நிலையத்தில் பரிசோதனைக்கு சென்ற பொதுச்சுகாதார பரிசோதகர்கள் இருவரை பூட்டி வைத்த இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவமானது இன்று (20) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தெல்லிப்பளை சுகாதர வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பன்னாலை பகுதியில் இயங்கி வந்த அனுமதியற்ற உணவுப்பொருள் தயாரிக்கும் நிலையமே இன்று சோதனையிடப்பட்டது.
சட்ட நடவடிக்கை
ஐரோப்பிய நாடொன்றில் குடியுரிமையுள்ள பிரதேசவாசியொருவரும், சிங்கள பெண்ணொருவரும் அந்த தொழிற்சாலையை நடத்துவதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த தொழிற்சாலையில் உணவுப்பொருட்கள் தயாரிக்கப்பட்டு வெளிநாட்டுக்கு அனுப்பப்படுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
அந்த தொழிற்சாலை இதுவரை முறைப்படியான பதிவுகளை பூர்த்தி செய்திருக்கவில்லை.
இன்று பதில் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் பரிசோதனைக்காக சென்றுள்ளனர். தொழிற்சாலை பதிவு செய்யப்படாததை குறிப்பிட்டு, அவர்கள் மீது சட்ட நடவடிக்கையெடுக்கவுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கைது நடவடிக்கை
இதன்போது, உரிமையாளர்களின் அடையாள அட்டையை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் கேட்ட போது, சுகாதார பரிசோதகர்கள் இருவரையும் தொழிற்சாலைக்குள் வைத்து உரிமையாளர்கள் பூட்டிவிட்டனர்.
இதனையடுத்து தெல்லிப்பளை காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சுமார் அரை மணித்தியாலத்தின் பின்னர், தெல்லிப்பளை காவல்துறையினர் தலையிட்டு, பொதுச்சுகாதார பரிசோதகர்களை மீட்டெடுத்தனர்.
மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய தொழிற்சாலை உரிமையாளரும், பெண்ணும் தலைமறைவான நிலையில், இன்று மாலை அவர்கள் இருவரும் தெல்லிப்பளை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |