பிரித்தானியாவுக்கு ஐ.எம்.எவ் பகிரங்க எச்சரிக்கை
பிரித்தானிய அரசாங்கத்தின் வரிக் குறைப்பு திட்டங்களை சர்வதேச நாணய நிதியம் பகிரங்கமாக விமர்சித்துள்ளது.
இந்த நடவடிக்கை வாழ்க்கைச் செலவு நெருக்கடியை மேலும் அதிகரிக்க செய்யும் என நாணய நிதியம் எச்சரித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியமானது வழமைக்கு மாறாக, வெளிப்படையான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதுடன், பிரித்தானியாவின் அண்மைய வரிக்குறைப்பு அறிவிப்புகளை விமர்சித்துள்ளது.
பவுண்ட் கடுமையான வீழ்ச்சி
இந்த முன்மொழிவுகள் சமத்துவமின்மையை அதிகரிக்கும் என்பதுடன், பெறுமதி ஏற்ற அழுத்தங்களுக்கும் வழி வகுக்கும் என சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.
இந்தத் திட்டங்கள் தொடர்பான எச்சரிக்கைகள் சந்தைகளில் பிரதிபலித்து வருவதுடன், பவுண்டின் பெறுமதியும் கடுமையான வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது.
எனினும் தமது இந்த நடவடிக்கை பொருளாதார வளர்ச்சியை தூண்டும் என பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மிகப் பெரிய வரிக்குறைப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் கரிசனைகள் அடங்கிய அறிக்கை வெளியான பின்னர், ஸ்ரேலிங் பவுண்டின் விலையானது 0.7 வீதத்தால் வீழ்ச்சி அடைந்து, 1.06 டொலராக பதிவாகியுள்ளது.
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகப் பெரிய வரிக்குறைப்பு அறிவிப்புக்களை பிரித்தானிய நிதி அமைச்சர் வெளியிட்ட நிலையில், வட்டி வீதங்களுடன் அரசாங்கத்தின் கடன்களும் அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.