பிரித்தானிய நிதியமைச்சரின் புதிய அறிவிப்பு - நிதிக் கட்டமைப்பில் பாரிய அதிர்வு
பிரித்தானியாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் பாரிய அளவில் வரிக் குறைப்புக்களை செய்யும் திட்டத்தை நிதி அமைச்சர் குவாசி குவார்ரெங் இன்று அறிவித்துள்ளார்.
இதன் பிரகாரம் வருமான வரி மற்றும் வீடுகளை கொள்வனவு செய்வதற்கான முத்திரை வரி ஆகியன குறைக்கப்படவுள்ளதுடன், வணிக வரிகளில் திட்டமிடப்பட்ட உயர்வு மீளெடுக்கப்படுகின்றது.
பிரித்தானியாவின் ஆளும் கென்சவெட்டிவ் கட்சியின் தலைமைத்துவ பதவிக்கு போட்டியிட்ட போது வரிக் குறைப்பு மூலம் மக்கள் மீதான சுமைகளை குறைப்பதாக பிரதமர் லிஸ் ட்ரஸ் உறுதி வழங்கியிருந்தார்.
குறுகிய வரவு - செலவுத் திட்டம்
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் இன்று குறுகிய வரவு - செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றிய நிதி அமைச்சர் குவாசி குவார்ரெங், பொருளாதார வளர்ச்சியை புதிய திசையில் கொண்டுசெல்வதற்கு பாரிய மாற்றம் தேவை என கூறியுள்ளார்.
பிரித்தானியாவின் பொருளாதார ஏற்கனவே மந்த நிலையில் இருப்பதாக இங்கிலாந்து வங்கி எச்சரித்துள்ள பின்னணியில் இந்த வரிக்குறைப்பு அறிவிப்புகள் வெளியிடபபட்டுள்ளன.
பவுண்ஸ்சின் பெறுமதி வீழ்ச்சி
பிரித்தானிய நிதி அமைச்சர் இந்த அறிவிப்புக்களை வெளியிட்ட போது, பிரித்தானிய பவுண்ஸ்சின் பெறுமதியானது கடந்த 37 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி கண்டிருந்ததது.
பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் எனத் தெரிவித்து நிதி அமைச்சர் அறிவித்துள்ள வரிக் குறைப்பு மற்றும் ஏனைய பொருளாதார நடவடிக்கைகள் பிரித்தானிய நிதி கட்டமைப்பில் பாரிய அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
1972 ஆம் ஆண்டுக்கு பின்னர் மிகப் பெரிய வரிக் குறைப்பை அரசாங்கம் அறிவித்துள்ளதாக நிதி ஆய்வுகள் நிறுவனத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்கொட்லாந்துக்கு பொருந்தாது
இதன்பிரகாரம் வருமான வரியானது 19 வீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதுடன், அதிக வருமானம் ஈட்டும் பெருநிறுவனங்களுக்கான 45 வீத வரி விதிப்பு மீளெடுக்கப்படுகின்ற போதிலும் இது ஸ்கொட்லாந்துக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய காப்புறுதிக்கான அதிகரிப்பு மாற்றப்பட்டுள்ள அதேவேளை, இங்கிலாந்து முழுவதும் குறைந்த வரி முதலீட்டு மண்டலங்கள் அமைக்கப்படும் எனவும் நிதி அமைச்சர் கூறியுள்ளார்.
இங்கிலாந்து மற்றும் வட அயர்லாந்தில் வீடுகளை கொள்வனவு செய்வோர் முத்திரை கட்டணம் செலுத்த வேண்டிய வரம்பு 2 இலட்சத்து 50 ஆயிரம் பவுண்ஸ்சாக உயர்வடைந்துள்ளது.
அத்துடன் சொத்துக்களை முதல் முறையாக கொள்வனவு செய்வோருக்கான முத்திரை கட்டணம் செலுத்த வேண்டிய உச்ச வரம்பு 4 இலட்சத்து 25 ஆயிரம் பவுண்ஸ்சாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பணக்காரர்களுக்குரிய திட்டங்கள் என விசனம்
எனினும் இந்தத் திட்டமானது வாழ்க்கை செலவு நெருக்கடியை குறைப்பதற்கு தீர்வாகாது என்பதுடன், செல்வந்தர்களுக்கு வெகுமதி அளிக்கும் ஒன்றாக இருக்கும் என பிரதான எதிர்கட்சியான தொழிற்கட்சி தெரிவித்துள்ளது.