பிரித்தானிய மக்களுக்கு பேரிடியாய் வந்த தகவல்
கொரோனா தொற்று பரவல் செலவுகளை பல தசாப்தங்களுக்கு பிரித்தானியாவின் வரி செலுத்துவோர் சுமக்க வேண்டும் என அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலுக்கு எதிரான பிரித்தானிய அரசாங்கத்தின் பதில் நடவடிக்கைகள் நாட்டின் வரி செலுத்துவோரை குறிப்பிடத்தக்க நிதி அபாயங்களுக்குள் தள்ளியுள்ளதாக பொதுக் கணக்குகள் குழுவின் இரண்டு அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயன்படுத்த முடியாத பாதுகாப்பு கருவிகளுக்கான அரசாங்கத்தின் செலவுகளையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமர்சித்துள்ளனர். வரிசெலுத்துவோரின் பணத்தை செலவு செய்யும் உறுதியான செயன்முறைகள் உள்ளதாக சுகாதாரத் திணைக்களம் கூறியுள்ளது. கொரோனா தொற்று பரவல் தொடர்புபட்ட அரசாங்கத்தின் செலவீனங்கள் ஏற்கனவே கடந்த மே மாதம் 372 பில்லியன் பவுண்ஸ்சை தொட்டுள்ளதாக பல கட்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது எதிர்வரும் தசாப்தங்களில் வரி செலுத்துவோரை குறிப்பிடத்தக்க நிதி அபாயங்களுக்குள் தள்ளிவிடும் எனவும் அந்த அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பிரித்தானிய அரசாங்கத்தின் கடன் தொகையானது 2 புள்ளி 2 ரில்லியன் பவுண்ஸ் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 99 தசம் 7 வீதமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1960 களின் பின்னர் இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், கடந்த ஜுன் மாதத்தில் மாத்திரம் கடனுக்கான வட்டி மாத்திரம் 08 தசம் 7 பில்லியன் பவுன்ஸ்சாக காணப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எதிர்கால கொவிட் செலவீனங்களுக்கான ஒரு எடுத்துக்காட்டாக, அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட 92 பில்லியன் பவுண்ஸ் கடனில் மீள செலுத்த முடியாத 26 பில்லியன் பவுண்ஸ் கடன்களை வரி செலுத்துவோர் பொறுப்பேற்க வேண்டி வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரிய நிதிச் செலவீனங்கள் குறித்த தீர்மானங்களை மேற்கொள்ளும் போது அதுசார்ந்த வழமையான விதிகளை தளர்த்த வேண்டிய தேவை இருப்பதை ஏற்றுக்கொள்வதாகவும் அந்த அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த செலவீனங்கள் பாரதூரமான ஆபத்துக்களை உருவாக்கியுள்ளதால், அதனை பல ஆண்டுகளுக்கு நிர்வகிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளதாகவும் பொது கணக்குகள் குழு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இதனை எவ்வாறு சமாளித்து முன்னோக்கி செல்வது என்பதையும் எவ்வாறான விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதையும் அரசாங்கம் தெளிவாக தீர்மானிக்க வேண்டும் என பொதுக் கணக்குகள் குழுவின் தலைவர் மெக் ஹில்லியர் கூறியுள்ளார்.