முற்றாக முடங்கியது பிரித்தானியாவின் பிரதான விமான நிலையம்!!
பிரித்தானியாவின் முக்கிய மற்றும் மிகப்பெரிய விமான நிலையமாகக் கருதப்படும் ஹீத்ரோ விமான நிலையம் இன்று (21) நாள் முழுவதும் மூடப்பட்டுள்ளது.
விமான நிலையத்திற்கு மின்சாரம் வழங்கும் ஒரு மின் துணை நிலையத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த தீ விபத்தானது, விமான நிலையத்தில் குறிப்பிடத்தக்க மின் தடையை ஏற்படுத்தியுள்ளதாகவும், பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஹீத்ரோ விமான நிலையத்தின் அறிக்கை ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளது.
மில்லியன் கணக்கான பயணிகள்
ஹீத்ரோ பிரித்தானியாவின் மிகப்பெரிய விமான நிலையமாகும், ஒரு நாளைக்கு சுமார் 1,300 விமான தரையிறக்கங்கள் மற்றும் புறப்பாடுகளைக் கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு (2024) ஹீத்ரோ விமான நிலைய முனையங்கள் வழியாக சாதனை அளிவில் 83.9 மில்லியன் பயணிகள் பயணம் செய்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தீயணைப்பு
இந்த நிலையில், மேற்கு லண்டனின் ஹேய்ஸில் உள்ள துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது, மேலும் சுற்றியுள்ள பகுதியிலிருந்து சுமார் 150 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, தீயை அணைக்க பத்து தீயணைப்பு இயந்திரங்களும் சுமார் 70 தீயணைப்பு வீரர்களும் அனுப்பப்பட்டுள்ளதாக லண்டன் தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.
கூடுதலாக, தீ விபத்து காரணமாக ஏற்பட்ட மின் தடை காரணமாக 16,300க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்