பிரித்தானிய பிரதமர் பதவிக்கு 3 முன்னணி போட்டியாளர்கள்..! வெளிப்பட்ட ஆதரவு பட்டியல்
புதிய இணைப்பு
பிரித்தானியாவின் புதிய பிரதமராக வருவதற்குரிய போட்டியில் இதுவரை அதிகாரபூர்மாக யாரும் தமது பெயரை அறிவிக்கவில்லையென்றாலும், இந்தக்களத்தில் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக், முன்னாள் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் மற்றும் பென்னி மோர்டன்ற் ஆகியோர் முன்னணி போட்டியாளர்களாக உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரித்தானியாவின் புதிய பிரதமருக்குரிய போட்டியில் பல போட்டியாளர்களை விடுத்து, ஒரு வேட்பாளருக்கு பின்னால் அனைத்து கென்சவெட்டிவ் உறுப்பினர்களும் அணி திரள வேண்டும் என்ற கோரிக்கைகள் விடுக்கப்பட்டாலும் எதிர்வரும் திங்கள் அன்று இறுதிசெய்யப்படும் வேட்பாளர் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இடம்பிடிக்கப்போவது யதார்த்தமாகியுள்ளது.
பிரதமர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் 100 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை எதிர்வரும் திங்கட்கிழமை பிற்பகலுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கட்சித்தலைமை அறிவித்துள்ளது.
ஆதரவு பட்டியல்
ஆயினும் இந்தச் செய்தி எழுதப்படும் வரை இதுவரை எந்த ஒரு வேட்பாளர்களும் தம்மை அதிகாரபூர்வமாக வெளிப்படுத்தவில்லை. ஆயினும் மூன்று முன்னணி வேட்பாளர்களுக்குரிய ஆதரவு பட்டியல் வெளிப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்தச் செய்தி எழுதப்படும் போது ரிஷி சுனக் - 45 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுள்ள அதேவேளை, பொறிஸ் ஜோன்சன் - 24 பேரின் ஆதரவையும், பென்னி மோர்டன்ற் - 17 பேரின் ஆதரவையும் பெற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் எதிர்வரும் திங்கட்கிழமை பிற்பகல் இரண்டு மணிக்குள் இந்த ஆதரவு பட்டியல் சமர்ப்பிக்கப்படவேண்டும் என்பதால், இந்த வார இறுதியில் இந்த ஆதரவு திரட்டும் களம் சுறுசுறுப்பு அடையும் என எதிர்பார்க்கலாம்.
முதலாம் இணைப்பு
பிரித்தானியாவின் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் 100 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை நாளை பிற்பகலுக்குள் பெற்றுக்கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைவர் தெரிவுக்கான போட்டியானது துரித கதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், பல போட்டியாளர்களை விடுத்து, ஒரு வேட்பாளருக்கு பின்னால் அனைத்து கென்சவேட்டிவ் கட்சி உறுப்பினர்களும் அணிதிரள வேண்டும் என முன்னாள் அமைச்சரவை அமைச்சர் டேவிட் லிங்ரன் வலியுறுத்தியுள்ளார்.
அடுத்த பிரதமர்
பிரித்தானியாவின் பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் அறிவித்த வரிக் குறைப்பு திட்டங்களால் ஏற்பட்ட கொந்தளிப்பை அடுத்து பதவியேற்று 45 நாட்களின் பின்னர் லிஸ் ட்ரஸ் நேற்று பதவி விலகியிருந்தார்.
இந்த நிலையில் ஆளும் கென்சவேட்டிவ் கட்சியின் தலைமைத்துவ பதவிக்கு போட்டியிட விரும்புவோர் நாளை பிற்பகல் 02 மணிக்குள் 100 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுள்ளதை உறுதி செய்ய வேண்டும் என 1922 செயற்குழுவின் தலைவர் சேர் கிரஹம் பிரடி அறிவித்துள்ளார்.
புதிய ஆளும் கென்சவேட்டிவ் கட்சியின் தலைவர் அடுத்த வெள்ளிக்கிழமைக்குள் நாட்டின் பிரதமராக பதவியேற்பார் எனவும் அவர் கூறியுள்ளார்.
ரிஷி சுனக் மற்றும் பென்னி மோர்டெண்ட் ஆகியோருடன், ஆச்சரியமளிக்கும் வகையில் பொறிஸ் ஜோன்சனும் மீண்டும் தலைமைத்துவ பதவிக்கு போட்டியிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக அடிமட்ட உறுப்பினர்கள் மத்தியில் பொறிஸ் ஜோன்சன் மிகவும் பிரபலமான ஒருவராக காணப்படுவதுடன், ரிஷி சுனக்கிற்கு அவ்வாறான ஆதரவு இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் கட்சியின் தலைமைத்துவ பதவிக்கு போட்டியிடுவது தொடர்பில் வெளியான தகவல்களை பொறிஸ் ஜோன்சன் இதுவரை ஏற்றுக்கொள்ளவோ நிராகரிக்கவோ இல்லை.
மீண்டும் பொறிஸ் ஜோன்சன்
இதனிடையே பொறிஸ் ஜோன்சன் மீண்டும் பிரதமர் பொறுப்பை ஏற்பதற்கு, வணிகத்துறை அமைச்சர் ஜேக்கப் ரீஸ் - மோக் முதலாவதாக தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.
நீண்ட காலமாக ஆட்சியில் நீடிக்கும் கென்சவேட்டிவ் கட்சி, நாட்டை நிர்வகிப்பதற்கான தகுதியை இழந்துவிட்டதாக தொழிற்கட்சியின் நிழல் நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் பதவிகளை மாற்றி மாறி விளையாடுவது போன்று செயற்படும் கென்சவேட்டிவ் கட்சி, நாட்டிற்கு தேவையான தலைமைத்துவத்தையும், ஸ்திரத்தன்மையையும் வழங்கப் போவதில்லை என கூறியுள்ளார்.
எதிர்கட்சித் தலைவர் சேர் கெய்ர் ஸ்ராமெயர், ஸ்கொட்லாந்து முதன்மை அமைச்சர் நிக்கோலா ஸ்ரேஜன், லிபரல் ஜனநாயக கட்சித் தலைவர் சேர் எட்வேர்ட் டேவி உள்ளிட்ட மூத்த அரசியல்வாதிகள் உடனடியாக தேர்தலை நடத்துவதற்கான அழைப்பை விடுத்துள்ளனர்.
