முடிவுக்கு வருகிறதா ரஷ்ய - உக்ரைன் மோதல்? பேச்சுக்களில் திருப்புமுனை
ரஷ்ய - உக்ரைன் பேச்சுக்களுக்கு மத்தியில் தீவிர மோதல்கள் தொடரும் நிலையில் 05 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
உக்ரைன் தலைநகர் கிவ், கார்கிவ் மற்றும் செர்னிஹிவ் நகரங்கள் ரஷ்ய படையினரின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைனின் செர்னிஹிவ் நகர் நோக்கி ரஷ்ய படையினர் மேற்கொள்ளும் எறிகணை தாக்குதல்கள் காரணமாக பல பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசாங்கம் கூறியுள்ளது.
இதனிடையே பெலரூஸ்சின் வட பிராந்திய எல்லைப் பகுதியில் வைத்து ரஷ்ய மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் முதல்முறையாக சந்தித்து பேச்சு நடத்திவருகின்றனர்.
இந்தப் பேச்சுக்களில் திருப்புமுனைகள் ஏற்படுவது சாத்தியமற்றது என்ற போதிலும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சாத்தியங்கள் சிறிய அளவில் உள்ளதாக உக்ரைன் அரசதலைவர் வெலெடிமீர் ஷெலென்ஸ்கி (wladimir selenski) நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதனிடையே பாம்பு தீவுகளில் ரஷ்ய படையினரால் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட 13 உக்ரைன் படையினர்கள், சிறைபிடிக்கப்பட்டு, உயிருடன் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய யுத்தக் கப்பல் நெருங்கிய போது அதற்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதை அடுத்து அவர்கள் அனைவரும் உயிரிழந்ததாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே குண்டுகளில் இருந்து தப்பிக்கும் வகையில் மில்லியன் கணக்கான மக்கள் சுரங்க தொடரூந்து நிலையங்கள் உட்பட பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பெச்லெட் கூறியுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை முதல் ஏழு சிறுவர்கள் உட்பட 102 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன், 300 பேர் வரை காயமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த எண்ணிக்கை கணிசமான அளவு அதிகமாக இருக்கலாம் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அச்சம் வெளியிட்டுள்ளார்.
தலைநகர் கீவ் வில் இருந்து 30 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ள ரஷ்ய படையினர், உக்ரைன் படையினரின் கடுமையான எதிர்தாக்குதலை எதிர்கொண்டுள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
இதனிடையே பிரித்தானியா, ஜேர்மனி, ஸ்பெய்ன், இத்தாலி மற்றும் கனடா உட்பட 36 நாடுகள் ரஷ்ய விமானங்கள் தமது நாட்டு வான்பரப்பை பயன்படுத்துவதற்கு தடைவிதித்துள்ளன.
அத்துடன் ரஷ்யாவில் உள்ள அனைத்து அமெரிக்கர்களையும் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், பெலரூஸ் தூதரக செயற்பாடுகளையும் இடைநிறுத்தியுள்ளது.
ரஷ்யாவிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை சுவிட்ஸர்லாந்தும் அங்கீகரித்துள்ளதுடன், ஏனைய நாடுகளும் ரஷ்யாவிற்கு எதிராக தொடர்ந்தும் கடுமையான தடைகளை விதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
