குண்டு வைத்துத் தகர்க்கப்பட்ட பாலம்..! தக்க பதிலடி கொடுத்த ரஷ்யா
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் முக்கியமான பாலம் நேற்று குண்டு வைத்து தகர்க்கப்பட்டது.
இத்தாக்குதலின் போது 3 பேர் உயிரிழந்தாகவும் தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதலை உக்ரைன் நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டியது. ஆனால் உக்ரைன் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
புடின் கண்டனம்
கிரீமியா பாலத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பை பயங்கரவாத நடவடிக்கை என்று ரஷ்ய அதிபர் புடின் கண்டனம் தெரிவித்தார்.
அதேவேளை, பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டார். ரஷியா-கிரீமியா இடையே உள்ள கியாஸ் குழாய் இணைப்பு, மின் இணைப்பு ஆகியவற்றின் பாதுகாப்பையும் பலப்படுத்த புடின் அறிவுறுத்தினார்.
இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவில் இன்று அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. குறைந்தபட்சம் 5 இடங்களில் குண்டு வெடித்திருக்கலாம் என்று கூறுப்படுகிறது.
இதில் பலர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்திற்கு ஏராளமான நோயாளர் காவு வண்டிகள் விரைந்தன.
உக்கிரமான தாக்குதல்
பாலத்தில் குண்டுவெடித்ததற்கு உக்ரைன் மீது குற்றம்சாட்டிய மறுநாளே இந்த உக்கிரமான தாக்குதலை ரஷ்யா அரங்கேற்றி உள்ளது.
உக்ரைனை உலகத்தில் இருந்து அழிப்பதற்கு ரஷியா முயற்சிப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கீவ் தவிர மேலும் பல நகரங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் அதிபர் அலுவலகம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
