சிறிலங்காவுக்கு ஏற்படவுள்ள மற்றுமொரு நெருக்கடி
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக மற்றுமொரு தீர்மானத்தை நிறைவேற்றப்படும் பட்சத்தில் நாட்டின் பொருளாதாரம் பாரிய பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும் என ஐக்கிய மக்கள் சக்தி எச்சரித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏரான் விக்ரமரத்ன (Eran Wickramaratne), இந்த தீர்மானமானது வெளிநாட்டு முதலீட்டாளர்களால் கவனத்தில் கொள்ளப்படும் என கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இம்முறையும் சிறிலங்கா தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளது.
அதற்கும் முதலீட்டிற்கும் இடையில் உள்ள என்ன தொடர்பு உள்ளது?
கடன் என்பது ஒரு பிரச்சினை. நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல, அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் முதலீடுகள் அவசியம். இங்கு நம்பிக்கை தொடர்பான பிரச்சினை எழுந்துள்ளது.
நாட்டிற்கு நீதி நிலைநாட்டப்படவில்லை. மனித உரிமைகள் பேணப்படுவதில்லை போன்ற நம்பிக்கை சார்ந்த பிரச்சினைகள் இருக்கின்றன.
சட்டக் கட்டமைப்புக்கு ஏற்ப செயற்படுவது குறித்தே முதலீட்டாளர்கள் கவனம் செலுத்துவார்கள். இந்த நாட்டுடன் ஒப்பந்தமொன்றை செய்தால், அது சட்ட கட்டமைப்புக்கு அமைய செயற்படுத்துவது முக்கியமானது.
முதலீட்டாளர்களுக்கு இது மிகவும் முக்கியமானது.
அது தொடர்பில் அவர்கள் அதீத சிரத்தை எடுப்பார்கள். அதுவே இது ஐ.நா தீர்மானத்திற்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் இடையில் உள்ள முக்கியமான தொடர்பாகும்” என்றார்.
