திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள்! அதிர்ச்சியளிக்கும் உலுகேதென்னவின் வாக்குமூலம்
திருகோணமலை கடற்படை தளத்தில் நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை விசேட விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.
முன்னாள் கடற்படைத் தளபதிகள் பலரிடமிருந்து இது தொடர்பில் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் கேகாலையை சேர்ந்த சாந்த பண்டார காணாமல் போனமை தொடர்பாக முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து மேற்கொண்ட விசாரணைகளில், திருகோணமலை கடற்படைத் தளத்தின் நிலத்தடி அறைகள் தொடர்பில் உலுகேதென்ன சில வாக்குமூலங்களை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
நிலத்தடி சிறைச்சாலைகள்
கடற்படை புலனாய்வு இயக்குநராக அவர் பணியாற்றிய காலத்தில், திருகோணமலை கடற்படை முகாமில் உள்ள "தன்ஜன்" மற்றும் "கன்சைட்" ஆகிய நிலத்தடி சிறைச்சாலைகளில் தனிநபர்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து அப்போதைய கடற்படைத் தளபதிகள் அறிந்திருந்தனர் என்பது விநாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்படி நிஷாந்த உலுகேதென்ன அளித்த அறிக்கையின்படி, அட்மிரல் சோமதிலக திசாநாயக்க மற்றும் அட்மிரல் திசர சமரசிங்க ஆகியோர் அப்போதைய கடற்படைத் தளபதிகளாகப் பணியாற்றியுள்ளனர்.
மேலும், முன்னாள் கடற்படைத் தளபதி ஜெயநாத் கொலம்பகே, ரியர் அட்மிரலாகவும், அந்தக் காலகட்டத்தில் திருகோணமலை கடற்படை முகாமின் கிழக்குத் தளபதியாகவும் பணியாற்றியதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கமைய திருகோணமலையில் உள்ள கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் வளாகத்தில் அமைந்துள்ள நிலத்தடி சிறைச்சாலைகளை ஆய்வு செய்ய அப்போதைய கடற்படைத் தளபதியாக இருந்த அட்மிரல் சோமதிலக திசாநாயக்கவிடம் அனுமதி பெறப்பட்டதும் தெரியவந்துள்ளது.
உலுகேதென்ன வாக்குமூலம்
மேலும் உலுகேதென்ன கடற்படை புலனாய்வு இயக்குநராக இருந்த காலத்தில், டி.பி. பிரேமரத்ன துணை புலனாய்வு இயக்குநராகப் பணியாற்றியதாகவும், மேலும் பிரசன்ன ஹேவகே சிறப்பு கப்பல் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றினார் என்று அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதன்படி சாந்த பண்டார என்ற நபரின் காணாமல் போனது தொடர்பாக நிஷாந்த உலுகேதென்ன வழங்கிய தகவலின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் துறை தனது எதிர்கால விசாரணைகளை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
மேலும் முன்னாள் கடற்படைத் தளபதிகள் மற்றும் அதன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பிற மூத்த அதிகாரிகளிடமிருந்து வாக்குமூலங்கள் எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள "தஞ்சன்" மற்றும் "கன்சைட்" நிலத்தடி சிறைச்சாலைகளில் தனிநபர்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டு காணாமல் போனது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மேலும் எதிர்காலத்தில் இந்த வழக்கில் மேலும் முக்கிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை விரிவான விசாரணை நடத்தி வருகிறது.
மேற்கூறிய அதிகாரிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பெறுவது சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்த முழுமையான தகவல்களைப் பெறுவதில் ஒரு முக்கியமான படியாகக் கருதப்படுகிறது.
சட்டவிரோத தடுப்புக்காவல் மற்றும் காணாமல் போனதற்கு காரணமான அனைத்து தரப்பினருக்கும் எதிராக அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
